வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - சினிமா பாணியிலான விபசாரங்கள்












 யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை அண்டிய பகுதி அது. சனநடமாட்டம் அதிகமுள்ள இடம். மக்கள் தமது அன்றாடக் கடமைகளை, வேலைகளை முடித்து விட்டு தமது இல்லிடங்களிற்கு திரும்பும் அந்தி மாலை வேளை. யாழ் நகரப்பகுதி வழமை போலவே பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.


அந்நேரத்தில் நடந்த சம்பவம் பார்த்தவர்களை கிறங்கடிக்க வைத்தது. நாகரிக உடையணிந்த கவர்ச்சி விருந்தளிக்கும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி செல்போனில் பேசியவாறு நிற்கிறாள். கட்டிளமைப்பருவ பெண்ணுக்கு இருக்கும் எடுப்பான தோற்றம் பார்ப்போரை சுண்டியிழுக்க வைக்கும் இறுக்கமான ஆடைகள் வித்தியாசமான சிகை அலங்காரம் அளவுக்குதிகமான முக ஒப்பனை என சாதாரண பெண்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் அலங்கரிப்புடன் செல்போனில் யாரோ ஒருவருடன் உரையாடியபடி நிற்கிறாள்.


அக்கணநேரத்தில் திடீரென ஒரு ஆட்டோ அவளருகில் வந்து நிற்கிறது. ஆட்டோ சாரதியுடன் ஏதோ கதைக்கிறாள் அந்த நவநாகரிக நங்கை. ஓரிரு நிமிடங்கள் வரை அவர்களது உரையாடல் தொடர்ந்திருக்கும் உடன் ஆட்டோவிற்குள் ஏறுகிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஆட்டோ சென்று மறைகிறது. இதற்கு பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்திருப்பீர்கள்.


இத்தகைய சினிமா பாணியிலான விபசாரங்கள் தினம் தினம் யாழ் நகரப்பகுதியில் நடைபெற்று வருவதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். குடாநாட்டில் விபச்சாரத்தொழில் தற்போது கொடிகட்டிப்பறக்கிறது. இதற்கு தற்போதைய சூழல் வாய்ப்பாக அமைந்துள்ளது.


தினம் தினம் முளைக்கும் விபச்சார விடுதிகள் இத்தொழிலிக்கு தீனி போடுகின்றன. யாழ் நகரை அண்டிய பிரதேசங்களிலும் நல்லூர் போன்ற பல புற நகர்ப் பகுதிகளிலும் கலாசார சீரழிவுகள் இரகசியமான முறையில் மிகவும் கச்சிதமாக இடம்பெற்று வருவதாக அறியவருகிறது.


குடாநாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் தமிழ்ப் பெண்களே தமது நாளாந்த வாழ்க்கைச் செலவுக்காக தமது உடலையே விற்றுப் பிழைக்கும் இழி செயல்களில் ஈடுபடுவதாகத் தெரியவருகிறது. அவர்களுக்கு குழந்தைகளும்கூட உண்டென்ற சோகம் நெஞ்சைப் பிழிகின்றது.


ஒரு காலத்தில் யாழ் குடாநாட்டின் கலாசாரம் உன்னத நிலையில் இருந்தது. பலர் கூட எமது கலாசாரப் பண்பாட்டினை வியந்து போற்றினர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற மகோன்னத வாழ்க்கையை நடத்தியவர்கள் எம்மவர்கள். திருமணமாகாத பெண்கள் ஆண்களுடன் நேரெதிரே நின்று பேசுவதற்கு நாணும் அளவுக்கு இறுக்கமான குடும்ப சூழலைப் பிரதிபலிக்கும் உயர் பண்பாடு தமிழரின் விழுமியத்தைப் பாதுகாப்பதாக ஒவ்வொரு செயற்பாடுகளிலும் கலாசார அடையாளங்கள் விகர்சித்திருந்த காலமது.


தற்போது கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களே சிதைந்து போயிருக்கும் பின்னணியில் குடாநாட்டுப் பெண்களின் செயற்பாடுகள் மோசமான கட்டத்தை எட்டியிருப்பது வேதனைக்குரிய விடயம். இன்றைய சூழலில் கல்வி கற்பதற்கென யாழ் நகரப் பகுதியை அண்டியுள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதாக பெற்றோருக்குத் தெரிவித்து விட்டுவரும் பதின்ம வயதையுடைய பெண்கள் பலர் தமது வயதை ஒத்த மாணவர் ஒருவருடனோ அல்லது முன்பின் அறியாத ஆடவன் ஒருவருடனோ நட்பாகப் பழகி சினிமா திரையரங்குகளுக்குச் சென்று தமது காதல் லீலைகளை அரங்கேற்றுவது போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் குடாநாட்டில் அதிகரித்து வருவது சமூக அக்கறை கொண்டவர்களின் மனதைத் துளைக்கின்றது.


நாகரிகம் என்ற பெயரில் கவர்ச்சி உடைகளை அரைகுறை ஆடைகளைப் பெண்கள் அணிவது அக்கவர்ச்சியால் உந்தப்பட்ட எதிர்பாலினரின் தப்பான பார்வைக்கும் தவறான நடவடிக்கைகளுக்கும் இட்டுச் செல்லும் செயற்பாடுகளுக்கு வழி வகுத்துவிடும். ஆக தமிழரின் கலாசாரம் இன்று நெறி பிறழந்து செல்வது பற்றிச் சமூகப் பிரக்ஞை உடையவர்களிடமிருந்து பல்வேறு ஆதங்கமாக கருத்துக்கள் வெளிவருகின்றன.


"கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்" என்ற நிலைக்குள் எங்கள் சந்ததி தள்ளப்பட்டு விட்டது. யாரோடு நோவது யார்க்கெடுத்துரைப்பது என்ற நடுக்கொள்ளி எறும்பின் நிலையில் எம்மினம் இருக்கிறது.


எனவேதான் ஒரு இனத்தின் ஆணி வேராக அவ்வினத்தின் கலாசாரம் திகழ்கின்றது. கலாசாரம் பண்பாட்டில் அழிவுகள், சிதைவுகள் ஏற்படுமிடத்து அவ்வினத்தின் அழிவென்பது தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே எம்மினத்தின் அழிவுக்கு நாமும் பாத்திரவாளிகளாகவும் கோடரிக் காம்புகளாகவும் இருக்கப் போகின்றோமா? சிந்திப்போம் செயற்படுவோம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக