வெள்ளி, 8 மார்ச், 2013

தமிழ்ப் பெண்கள் உண்மையில் விடுதலை பெற்றுள்ளார்களா....?


பெண்கள்
நாட்டின் கண்கள் என்பர். மானுடத் தோற்றம் என்பதே இவர்களிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது.குடும்பத்தின் குலவிளக்காகவும் அன்பின் இலக்கணமாகவும் விளங்கும் பெண்கள் சமூகத்தில் போற்றுதற்குரியவர்கள் ஆதலால் தான் பெண்களைப்போற்றி அவர்களுக்கு மதிப்பளிக்கும் முகமாக மகளிர்தினம், அன்னையர்தினம் என பெண்களுக்கேயுரிய தனித்துவம் மிக்கதினங்கள் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு பெண்விடுதலை வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் பெண்விடுதலை, சமத்துவம் என்பவை வெறும் காகிதங்களுக்குள் சிக்கிக்கொண்டனவே அன்றி உண்மையில் தமிழ்ப் பெண்கள் இன்னமும் விடுதலையை எட்டவில்லை என்பதே நிதர்னமாகும். 

 தாயாகவும் தாரமாகவும் சகோதரியாகவும் இருந்து இல்லற வாழ்வைச்சிறப்படையச் செய்யும் பெண்களுடைய மன உணர்வுகளுக்கு ஆண்கள் மதிப்பளிக்கும் காலம் இன்று கனிந்து விட்டதா? பெண்கள் எமது சமூகத்தில் பெருமை மிக்கவர்களாக வாழ்கிறார்களா? பெண்மைக்குரிய தனித்துவமான பண்புகளைப் பிரதிபலிக்கிறார்களா..? சமூகத்தில் இன்று இவர்களுடைய நிலை என்ன...?  என்கிற வினாக்களுக்கு நாம் விடைதேட முற்படுவோமேயானால்...
 
தமிழ்ப்பெண்கள் தமது விடுதலை நோக்கிய பயணத்தின் உச்சத்தைதொட்ட காலம் விடுதலைப்போராட்டகாலமேயாகும். சமூகவிடுதலை, பொருளாதாரவிடுதலை ,தேசவிடுதலை என மும்முனைகளில் தமது விடுதலையை நோக்கி நகர்ந்த எம் தமிழ்ப்பெண்கள் அதில் வெற்றியும் கண்டனர். அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக  பெண்களின் ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்த பல களங்கள் அன்றைய தலைமையால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. சங்க இலக்கியங்கள் கூறிய புறத்துப் பெண்களை எம் கண்முன்னே கொண்டு நிறுத்திய அக்காலத்தில் உலகின் புரட்சிப் பெண்களாக எம்குலப் பெண்கள் உயர்ந்து நின்றனர். அன்று அவர்கள் சந்தித்த யுத்தகளங்கள் அவர்களுடைய வீரத்தைக் கட்டியம் கூறின. ஆயினும் காலம் அவர்கள் வரலாற்றை மாற்றி அமைத்துக் கொண்டது. சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க வேண்டி ஆண்களுக்கு நிகராக வீரமுடன் போராடிய எம் வீரமங்கைகள் மூச்சிழந்து வீழ்ந்தவேளை அவர்களது உடலங்கள் உலகத்தொலைக்காட்சிகளினதும் இணையங்களிலும் காட்சிப்பொருள்களாக மாற்றப்பட்டமை வரலாற்றில் ஓர் கறைபடிந்த அத்தியாயத்தை உருவாக்கியது.  இத்துன்பியல் நிகழ்வுக்குப் பின்னர் புதியதொரு பாதையில் தடம் பதித்து நகரத்தொடங்கிய எமது யாழ்சமூகத்தின் நிலை தலைகீழாக மாறத்தொடங்கியது. விடுதலைப்போராட்ட  காலத்தில் போராளிகளால் உருவாக்கப் பட்டிருந்த இறுக்கமான ஒழுக்கத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்த எமது சமூகம் விடுதலைப்போருக்குப்பின்னர் அது தளர்வடையவே தமது ஒழுக்கத்தினின்றும் விலகிச் செல்லத்தொடங்கியது. சுயஒழுக்கத்தின்பால் நின்றொழுகுபவர் எண்ணிக்கை மிகச்சொற்பமாகவே காணப்படுகின்ற இன்றைய சூழலில் பெண்கள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷபிரயோகங்களும் பன்மடங்காக அதிகரித்தே காணப்படுகின்றன. வீதிமுதல் வீடுவரை தொடரும் இம்சைகளால் அவஸ்தைப்படும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஓர் சூழலே நிலவிவருகிறது. இத்தகையதொரு சூழலில் ஆண்கள் பெண்களை எந்நிலையில் நோக்குகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க பெண்கள் தமது சுயத்தை கௌரவத்தை எந்தளவில் பேணிக்கொள்கிறார்கள் என்பதே இன்றைய காலத்தின் வினாவாகும்.
 
விடுதலைப் போராட்ட காலத்தில் பெண்களின் இயல்பான நடமாட்டத்திற்கும் இருப்புக்கும் ஏற்ற சூழல் இருந்தது இதனால் ஆண் பெண் வாழ்க்கை வரன்முறை வரையறைக்குட்பட்டிருந்தது. ஆனால் இன்றோ நிலமை தலைகீழ் வெளிநாட்டு நாகரீக மோகத்தின் கிறக்கத்தில் மதிமயங்கிய ஆண்களும் சரி பெண்களும்சரி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என தான்தோன்றித்தனமாகவே நடந்து கொள்கின்றனர். விவாகரத்துக்களும் முறைதவறிய கர்பங்களும் வீதியோர சிசுக்களும் இவர்களுடைய இத்தகைய தவறான நடத்தைகளின் பிரதிபலிப்புகளேயாகும். வெளிநாட்டு நாகரிகத்தின்பால் ஈர்க்கப்பட்ட எமது யுவதிகள் நமது நாட்டுக்கு ஒவ்வாத ஆடைகளை தமது அங்கங்கள் வெளிப்பட அரையும்குறையுமாக உடுத்தி நம் தமிழ்ப்பண்பாட்டை மறந்து மந்தைகளாய் அலைகின்றனர்.  
 
அறிவியல் அழகாகப் பிரசவித்த செல்போன் எனும் கைக்குழந்தை இன்று குரங்கின் கையில் பூமாலை சிக்கியகதையாக எம்குலப்பெண்களின் கைகளில் சிக்கி 'செல்லெனப்படுவது யாதெனில் நடுத்தெருவில் பல்இளிக்கச் செய்யும் கருவி' என நவீன குறள் சொல்லும் இடத்தை எட்டியிருக்கிறது.
 
'தெய்வம் தொழா (அ)ள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்று கூறினார் திருவள்ளுவர். ஆனால் இன்று யாழ்.குடாநாட்டிலே தொட்டுத்தாலிகட்டிய கணவன் இருக்க அவனுக்குத் தெரியாமல் இன்னொரு ஆடவணுடன் கள்ளத்தொடர்பை பேணி காமநுகர்ச்சியில் திளைக்கும் பெண்களின் எண்ணிக்கையே அதிகம். பெண்ணினத்துக்குப் பெருமைசேர்ப்பதே இறைவனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தாய்மை. ஆகவே தான் தாய்மையின் சிறப்புரைத்த பாரதிதாசன் 'நாய் என்று நவில்வார்க்கும் இப்புவிக்குத் தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே' என பெண்ணுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக தாய்மையைக் கூறினார். இதை உணராது தம் குலத்தை தாமே சந்தி சிரிக்கச் செய்யும் யாழ்.குடாநாட்டுப் பெண்கள் சிலர் தகாத உறவுகளால் கர்ப்பமடைந்து ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்ற சிசுக்களை வீதியில் விட்டெறிந்து பெண்ணினத்துக்கே களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர். பெண்களே பல உயர் இடங்களின் தலைமைப் பதவிகளை அலங்கரிக்கும் மாவட்டத்தில் பெண்ணினம் சீரழிந்து போவது வேதனைக்குரிய விடயமேயாகும்.
 
இவ்வாறு ஒருபுறம்  பெண்ணினம் தலைகுனியும்படி துர்நடத்தைகளில் சில பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை பெண்கள்மீது பாலியல் பலாத்காரங்களைத் திணித்து அவர்களைத் துன்புறுத்தும் ஆண்கள் கூட்டம் மறுபுறம். கல்விச்சாலைகள் வேலைத்தளங்கள் வெளியிடங்கள் என பல்வேறு தளங்களிலும் பெண்களைப் பாலியல் இம்சைகளுக்கு உட்படுத்திய அண்களின் துன்புறுத்தல்கள் இன்று வீட்டினுள்ளேயும் புதிதாக விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமது சொந்த வீட்டிற்குள்ளேயே தமது சொந்த மகள்மார் மீது காமவெறியாட்டம் நடத்தும் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலும் இடம் பெற்று வருகின்றன. இத்தகைய தந்தைமாரின் பெருக்கம் அதிகரித்து வருகின்றமையால் வீட்டிற்கு வெளியே பல்வேறு பாலியல் இம்சைகளை அனுபவித்து வரும் பெண்கள் தமது சொந்த வீட்டினுள்ளும் நின்மதியாக வாழமுடியாத பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகிறது. இம்மிருகத்தனமான செயல் குடாநாட்டு யுவதிகளிடையே பீதியை உருவாக்கி தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஏனைய தந்தைமார்மீதும் சந்தேகப்பார்வை வீசும் நிலையை ஏற்படுத்தி வருவது மனம்வருந்தத் தக்கதாகும்.
 
தமிழர் கலாசார மரபின்படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற இறுக்கமான உறவுமுறையே காலாதிகாலமாக இருந்துவருகிறது. பலதாரமணம் என்பது மறுக்கப்பட்ட நிலையில் ஆணுக்கு மட்டும் இக்கட்டுப்பாடுகளில் தளர்வுப்போக்கு காணப்படுகிறது. இதனால் விவாகரத்துப் பெற்ற ஆண் ஒருவன் மறுமணம் செய்யத்தலைப்படுகின்றான்.ஆனால் விவாகரத்துப்பெற்ற பெண்ணை இன்னொரு ஆண்துணையுடன்வாழ எமது சமூககட்டமைப்பு அனுமதிப்பதில்லை. கணவனை இழந்த பெண்ணாக இருந்தால் பல மங்கள காரியங்களில் இச்சமூகத்தால் அவள் புறந்தள்ளப்படுகிறாள்.இதன் விளைவாக நான் தீண்டத்தகாதவள், மாசுபட்டவள் ,சமூகஅந்தஸ்து அற்றவள் என்கிற எதிர்மறையான சிந்தனைகள் அவள் மனதில் விதைக்கப்படுகிறது. இதனால் தனது வாழிவியலை ஓர் எல்லைப்படுத்தியவள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறாள். இத்தகைய உளவியல் தாக்கங்களே அவளை விபசாரம், முறைதவறிப்பிறந்த சிசுக்களை கொலைசெய்யும் வக்கிர எண்ணம் ,குடும்ப உறவுகளில் விரிசல்கள் போன்ற சமூகவிரோத செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. இத்தகைய சூழ்நிலையே இன்று எமது சமூகத்தில் விபசாரங்கள் பெருக வாய்ப்பளித்துள்ளன. இந்நிலையை மாற்ற கொடிய யுத்தத்தினால் கணவனை இழந்த விதவைப் பெண்களை மறுமணம் புரிய எத்தனை இளைஞர் தயாராக இருக்கின்றார்கள்.? தமது உடற்பசியைத் தீர்ப்பதற்காக இந்த அபலைப் பெண்களை பயன்படுத்திவிட்டுப் போகும் இழிநிலையே இங்கு காணப்படுகிறது. இந்நிலை மாற்றப்படவேண்டும். பணத்துக்காகவும் பாலியல் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக்கவும் வேறு வழியின்றி தமது உடல்களை அபலைகள் காமப்பேய்களுக்கு  தாரைவார்க்கின்றனர்.  ஒருசாண் வயிற்றுப் பசிபோக்க உடலை விற்கும் பெண்ணை அனுபவித்து அவளை விபசாரி எனத் தூற்றும் ஆண்வர்க்கம் தம் இழிசெயலை ஆண்மை என போற்றிப் பெருமிதம் கொள்கிறது. பெண் செய்கின்ற தவறுகள் ஊருக்குத் தெரியும் விதமாகவும் ஆண் செய்கின்ற குற்றங்கள் வெளியில் தெரியாத வண்ணமாகவும் படைத்த இறைவனுடைய படைப்பை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆண்வர்க்கம் பெண்வர்க்கத்தினரை எள்ளி நகையாடுவதற்கான போகப் பொருளாக ஆக்கிவிட்டது. அன்று ஆண்களின் இவ்விழிசெயல் கண்டதாலே வெகுண்டெழுந்த பாரதி 'கற்பென்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்' முழங்கினார். விபசாரத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின் சமூகத்தின் இக்கட்டமைப்பு மாற்றப்படவேண்டியதொன்றேயாகும். விதவைகள் மறுமணம், காதல் திருமணம் என்பவை சமூகத்தில் ஏற்கப்படவேண்டும். சமூகத்தில் பெண்ணடிமை நிலை மாற்றப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியே 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே' எனக்குரல் கொடுத்தார் புரட்சிக்கவி பாரதிதாசன். அன்று அவரது குரல் ஓங்கிஒலித்த போதிலும் அன்று தொட்டு இன்றுவரை பெண்களை அடிமைகொள்ள நினைக்கும் மனிதமனங்கள் மாற்றமுறவில்லை. குறைந்த கொடுப்பனவில் பெண்களை வேலைகளுக்க அமர்த்தி தமது வியாபாரத்துக்காக அவர்களைக் கவர்ச்சிப் பொருள்களாக்கி மலினப்படுத்தும் ஜென்மங்கள்; அவளையும் தன்னளவில் உரிமைகளும் தனித்துவமும் கொண்ட உயிரியாக கருதவில்லை. 

பெண்கள் ஆண்களின் இச்சைதீர்க்கும் போகப் பொருள்கள் எனும் ஆண்களின் சிந்தனை மாற்றப்படவேண்டுமேயானால் பெண்கள் தம் குலப்பெருமையை போற்றும் வகையில் தாம் வாழும் சமூகத்துக்கு ஏற்றவாறு நாகரிகத்துடன் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சீரழியும் இச்சமூகத்தை தடுத்து நிறுத்தி வளமான ஓர் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப ஆண்களுக்கு நிகர் பெண்களும் முன்வருவார்களேயானால் அவர்கள் வேண்டும் விடுதலையை வென்றுவிடலாம். அவ்வாறின்றி வெறுமனே பெண்விடுதலை சமத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் பயன் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.