ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சிந்திப்போம்...செயற்படுவோம்...


லாசாரபூமி என பலராலும் வர்ணிக்கப்பட்ட யாழ்ப்பாணக்குடா
தற்போது கலாசாரசீர்கேடுகளின் அரங்கமாக மாறிவருகிறது. யாழ்.மண்ணின் மகிமையை குன்றச்செய்யும் வகையில் புதியதொரு பிரச்சினையாக இக்கலாசாரசீர்கேடு தலைதூக்கியுள்ளது. இவைகளை எவ்வாறு தடுத்து நிறுத்தி அதிலிருந்து எவ்வாறு எமது சமூகத்தை மீட்சிபெறவைப்பதென்பதே எமக்கிருக்கும் பெரும்சவாலாகும். பண்பாட்டின் கருவூலமாகப் பார்க்கப்பட்ட யாழ்.மண் இன்று கொலை, களவு ,பாலியல் துஸ்பிரயோகம், விபசாரம் வேண்டத்தகாத உறவுகள் மது போதைவஸ்த்துப்பாவனை  என்பவற்றுள் சிக்கிச் சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது.
 
ஆகவே எமது சமூகம் ஏன் இத்தகைய தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது? இத்தகைய தவறான போக்கு இறுதியில் எம்மினத்தை எங்கு கொண்டு சேர்க்கப்போகிறது? எனும் கேள்விகள் எம் மனதைக் குடைகின்றன.
 
உலகிற்கே பண்பாட்டைக் கற்றுத்தந்தவர்கள் நாம் என்று பெருமை பேசிய எம்மவர்கள் இன்று அந்நிலைகடந்து எம்பண்பாட்டைத் தொலைத்து மொத்த இனத்துக்கும் களங்கம் கற்பிக்க முனைவது தமிழர்களாகிய நாம் வருந்தத்தக்க விடயமாகும். நாம் கடந்து வந்த காலங்களின் நினைவுகளை சற்று மீட்டிப்பார்ப்போமேயானால் அன்று எம்மினம் கொடிய யுத்தத்தால் முழுமையாக உள்வாங்கப்பட்டிருந்த காலம். எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரினாலும், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளினாலும், உயிரிழப்புக்கள் ,உடமை இழப்புக்கள் உறவுகளின் இழப்புக்கள் என துன்பச்சுழியில் சிக்கிச் சுழன்ற காலமது.  அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுபடத்துடித்த எம்மக்கள் என்றுமில்லாதவாறு பெரும் மனிதப்பேரவலங்களைச் சந்தித்தவண்ணமிருந்தனர். இந்நிலையில் கூட எமது யாழ்.மண் தமது கலைகலாசார பண்பாட்டு விழுமியங்களில் ஆழவேரூன்றியிருந்தது. தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் கட்டிக்காக்கப்பட்டன. ஒழுக்கம் தலைசிறந்து விளங்கியது.
 
இவ்வாறு அன்று எம்மினம் ஓர் தனிச்சிறப்போடு மிளிர்ந்தமைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் எம் மண்மீதும் எம் பண்பாட்டின் மீதும் கொண்டிருந்த அதீத அக்கறையும் பண்பாட்டைப்பேணுவதில் காட்டிய கண்டிப்புமே ஆகும். ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. மது, போதைவஸ்து, விபசாரம், காமக்களியாட்டங்கள் என யாழ் மண் ஓர் உல்லாசபுரியாக மாறிக்கொண்டிருக்கிறது. யுத்தகாலத்திலே எம் உறவுகள் பலர் காணாமல்போனோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல் யுத்தத்தின் பின் யாழ்.மண்ணின் பண்பாடும் காணாமல்போனோர் பட்டியலில் சேர்ந்துகொண்டிருப்பது சமூகப்பிரக்ஞை உள்ளவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகின்றது. உரிமைகள் மறுக்கப்படும்போது புரட்சி ஓங்குவதும் சட்டம் செயலற்றுப்போகும்போது வன்முறை வெடிப்பதும் நீதி நிராகரிக்கப்படும்போது அநீதி தலைகாட்டுவதும் நியதியாகும். ஆகையால் யாழ்.குடாநாட்டில் நடந்தேறும் கலாசாரசீர்கேடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் ஆளுமைமிக்க ஓர் தலைமைத்துவம் இல்லாமையே சீர்கேடுகள் அதிகரிக்க வழிவைக்கிறது என்பதே நிதர்சன உண்மையாகும்.
 
எமது பண்பாட்டுச்சிதைவுகள் என்பது வெறுமனே பாலியல் சீர்கேட்டுச்சம்பவங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. .அதற்கு அப்பாலும் விரிவடைந்து செல்கின்றது. பன்நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மூத்தோரை மதிக்கும் பண்பு இன்று எம்மவரில் எத்தனைபேரிடம் காணப்படுகிறது? ஏன்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும். இன்று எம் இளைஞர்களில் பலர் அடிதடி, கொலை, களவு என வன்முறையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பது கண்கூடாகும். ஈரைந்து மாதங்கள் தம்மைக் கருவறையில் தாங்கி பாலூட்டி சோறூட்டி அரவணைத்த தாயையும் தோள்மீது தாங்கி வளர்த்த தந்தையையும் இன்று முதியோர் இல்லங்களில் கொண்டுசேர்க்கும் அளவில் தான் எம்மவரின் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது.
 
அன்று யாழ்.மண்ணில் வாழ்ந்த மக்கள் இறைபக்தியும் ஆன்மீக நாட்டமும் மிக்கவர்களாக விளங்கினார்கள். காலையில் எழுந்து நீராடி தினம்தோறும் ஆலயங்களுக்குச்சென்று இறைவழிபாடு ஆற்றிவந்தார்கள். இன்று எமது மக்களோ இறைவனைத் தரிசிக்கக்கூட நேரமின்றி பணம் பணம் என்று பிணம் தின்னிக் கழுகுகளாய் பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காலை எழுந்தவுடன் இறைவனைப் பூசித்த காலம் போய் இன்று காலை எழுந்தவுடன் இளைஞர் முதல் முதியவர் வரை வயது வித்தியாசமின்றி மதுச்சாலைகளின் முன்னே அது திறக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதைக் காணமுடிகிறது.
தென்னிலங்கைவாசிகள் யாழ். மண்ணிலே வேலைசெய்து பிழைப்பை நடத்த
எம்யாழ்.  மண்ணின் மைந்தர்களோ வேலைசெய்ய நேரமுமின்றி வேலைசெய்யும் மனோநிலையும் அற்றவர்களாய் வெளிநாடுகளில் அவர்களது உறவுகள் வியர்வை சிந்தி உதிரத்தை உழைப்பாக்கி அனுப்பும் பணத்தை வீணே மதுப்போத்தல்களுக்காகவும், புகைத்தலுக்காகவும் கரைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகிற்கே பண்பாட்டைக் கற்றுத்தந்த எம் இனம் இன்று நாகரிக மோகத்தால் கட்டுண்டு தமிழர் பிரதேசத்துக்கும், பண்பாட்டுக்கும் ஒவ்வாத வகையில் விரசமான ஆடை அணிகலன்கள் சிகை அலங்காரங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறது.
 
'இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்'ஆகையால் இன்று யாழ்.சமூகத்தின் மீது அக்கறை கொள்ளாது இனத்தின் இருப்பை உறுதி செய்ய முன்வராத எம் இளைஞர், யுவதிகளை நாளை நாட்டின் தலைவர்களாக்கினால் எமது யாழ் சமூகத்துக்கு எதைச்செய்யப்போகிறார்கள் என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
 

எனவே இளைஞர்களே, யுவதிகளே உங்கள்  பிரதேசத்தில் இடம்பெறும் சமூகப்பிறழ்வுகளைப் புறமொதுக்கி  எமது பண்பாட்டைக்காக்க விரைந்து செயற்படுங்கள் அவ்வாறின்றி வெறும் சிற்றின்பங்களுக்குள் மூழ்கிக் கிடப்பீர்களாயின் எமது இனம் எமது பண்பாடு என்பன அழிந்து போகும். இதற்காகவா நாம் இத்தனை காலமும் இவ்வளவு இன்னல்களை எதிர்கொண்டோம்? முகம் கொடுத்தோம்? உடமைகளை இழந்தோம் உறவுகளை இழந்தோம், அங்கங்களை இழந்தோம் அநாதைகளானோம் இத்தனை துன்பங்களைத் தாங்கியது எதற்காக....?
எம் இனம் வாழ எம்குலம் வாழ எம்மொழி எம்பண்பாடு வாழ வேண்டும் என்பதற்காகத்தானே? ஆகையால் யாழ். குடாநாட்டு இளைஞர்களே யுவதிகளே மூத்தோர்களே கல்விமான்களே சிந்தியுங்கள் எம் பண்பாட்டைக் காக்கும் முனைப்போடு செயற்படுங்கள் வருங்காலம் உங்கள் கையில்.