ஞாயிறு, 21 அக்டோபர், 2012

யாழ்ப்பாணத்தின் விட்டுப்போகும் உறவுகளாகும் மட்பாண்டங்கள்

அழிவடைந்து செல்லும் மட்பாண்டக் கைத்தொழில் ஓர் மீள்பார்வை


கலாசார பண்பாட்டு விழுமியங்களில் மாத்திரமின்றிக் கைத்தொழிலிலும் பாரம்பரியம் மிக்க பூமியாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் இன்று பல பாரம்பரியக் கைத்தொழில்கள் அருகிவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அருகிவரும் இக்கைத்தொழில்களில் கலைநயம் மிக்கதொரு கைத்தொழிலாக விளங்கும் மட்பாண்டக் கைத்தொழில் மிக முக்கியமானதாகும். இன்று மாறிவரும் உலகின் போக்கிற்கேற்பத் தமது வாழ்வியலையும் மாற்ற முற்பட்ட யாழ்.குடாநாட்டு மக்கள் தமது பாரம்பரிய உறவுகளாகிய மட்பாண்டங்களைப் புறமொதுக்கிப் புதிய உறவுகளாக வலம் வரும் சில்வர் வெள்ளி அலுமினியப் பாத்திரங்களையே வரவேற்கத் தொடங்கியதன் விளைவாக இன்று யாழ்பாணத்தின் விட்டுப்போன உறவுகளாக மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
 
'மண்ணையும் பொன்னாக்கு' என்ற எம்முன்னோர்களின் கூற்றுக்கு இணங்க மண் எனும் மூலப்பொருளை மட்பாண்டம் எனும் கலைநயம் மிக்க முடிவுப்பொருளாக்கி எமக்களிக்கும் மட்பாண்டத்தொழிலாளியாகிய குருசாமி பிள்ளையார்செல்வத்தை உடுவிலில் அமைந்திருக்கும் அவரது தொழிற்தளத்தில் சந்தித்து அழிவடைந்து செல்லும் மட்பாண்ட உற்பத்திபற்றி எமக்கிருந்த ஆதங்கத்தினை வினாக்களாக்கித் தொடுத்தபோது இது குறித்து அவர் பின்வருமாறு கூறுகிறார்.
 
'மட்பாண்டங்களுக்குத் தேவையான மண்ணைப்பெற்றுக் கொள்வதிலேயே நாம்பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தொழிலுக்குத்தேவையான மண்ணை நெடுங்கேணி ,ஒட்டுசுட்டான், மல்லாவி ,கண்டாவளை போன்ற பிரதேசங்களிலிருந்து தான் கொண்டு வரவேண்டியுள்ளது. அங்கிருந்து மண்ணை இங்கு கொண்டு வருவதற்குரிய அனுமதி பெறுவது எங்களுக்குப் பெரும் சிரமமாக உள்ளது' என்றார்.  இன்று யாழ்.குடாநாட்டில் மட்பாண்டங்களின் விற்பனை மந்தகதியில் செல்வதற்கான காரணங்களை வினவினேன். அதற்குப் பதிலளித்தவர் 'இப்ப கொண்டுசெல்வதற்கும் கழுவிப்பாவிப்பதற்கும் சுலபமாக இருக்கிறதால அலுமினியப் பாத்திரங்களைத் தான் மக்கள் அதிகமாக விரும்பினம் அதோட காஸ்(Gass) அடுப்புத்தான் பாவனைக்கு உகந்தது என்று நினைக்கினம். முன்னர் எல்லாம் பண்டிகைக் காலங்களில் மண்பானை சட்டிகள் பெருமளவில் விற்பனையாகும். ஆனால் இப்ப தைப்பொங்கல் பண்டிகைக்கு கூட மக்கள் மண்பானைகளை விடுத்து அலுமினியம் ,சில்வர் பானைகளையே வாங்கிறதால பண்டிகைக்கால விற்பனைகளும் குறைஞ்சு போச்சு ஏதோ கோயில் திருவிழாக்காலங்களில் கற்பூரச் சட்டிக்காக எமது மண்சட்டிகளை வாங்கிறதாலயும் ஆடி அமாவாசை ,கார்த்திகை விளக்கீடு போன்ற விரத அனுட்டானங்களை இன்னமும் கடைப்பிடிக்கிறதாலயும் தான் எங்கட தொழில் ஓரளவுக்கேனும் ஓடிட்டு இருக்கு. சீவல் தொழிலாளிகளும் இப்ப முட்டிகளை வாங்கிறதில்லை பிளாஸ்ரிக் போத்தல்களைப்  பயன்படுத்தினம்' எனக்கூறினார்.
 


தென்னிலங்கையிலிருந்து விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் அழகிய வர்ணப்பூச்சுக்களுடன் கூடிய கூசாக்கள் ,மண் உண்டியல்கள் போல் இங்கு எம்மாலும் இவற்றைச் செய்யமுடியும் ஆயினும் அதற்குப் போதிய பண வசதி எம்மிடமில்லை எனக் கூறுகிறார் கல்வியங்காட்டில் மட்பாண்டத் தொழிலைச்செய்துவரும் பழனிமுருகையா இராஜேந்திரன். சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இம்மட்பாண்டத் தொழிலைச் செவ்வனே செய்துவரும் இவர் தமக்கிருக்கும் பிரச்சினை பற்றி மேலும் இவ்வாறு தெரிவித்தார்.

'சிறுகைத்தொழில் கண்காட்சிகளுக்காக எங்களைத்தேடி இங்க வாற அதிகாரிகள் எங்களுக்கு உதவி பெற்றுத்தருவதாக கூறுவார்கள். ஆனால் தங்கடதேவை நிறைவேறியதும் எங்களை எவருமே திரும்பிக்கூட பாக்கிறதில்லை. திரும்பவும் ஒரு மூன்று வருசத்துக்குப் பிறகு ஒரு கண்காட்சி வந்தால் தான் திரும்ப எங்களிட்ட வருவினம். எங்களுக்கு  கடன் உதவி பெற்றுத்தரக்கூட யாரும் முன்வருவதில்லை. நாங்களா வங்கியில கடனுதவி பெறுவோம் என்று போய்க் கேட்டாலும் அரச உத்தியோகத்தில இருக்கிற இரண்டுபேர் கையெழுத்துப்போட வேண்டும் என்பார்கள். எங்களுக்காக கையெழுத்து உதவி பெற்றுத்தர யாருமில்லை. இதனால் தான் நாங்கள் இனியும் இந்தத் தொழிலையே நம்பிக் கொண்டிருக்காமல் எங்களுடைய பிள்ளைகளையாவது நல்லாப் படிக்கவைக்கிறம். எங்களுக்குப் பிறகு எங்கட பிள்ளையள் இந்தத் தொழிலைச் செய்யமாட்டினம் தம்பி. எங்கட தலைமுறையோட இந்தத் தொழில் முடிஞ்சு போயிரும் என ஏக்கத்துடன் கூறியவரின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் படர்ந்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. 

மண்பானை,  சட்டிகளில் சமைத்து உண்ணும் உணவின் சுவையோ தனி என்று கூறுவார்கள். மண்பானை சட்டிகளில் சமைக்கும் உணவுப் பண்டங்கள் எளிதில் பழுதடைவதுமில்லை. அதேவேளை வெயில் காலங்களில் மண்பானையில் இட்டு வைக்கும் நீரின் இயற்கையான குளிர்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை. இவ்வாறு இயற்கை தரும் குளிர்ச்சி உடலுக்கு தீங்கில்லாதது. டல் ஆரோக்கியத்தைப் பேணுவதாகும். ஆயினும் இத்தகு சிறப்பு வாய்ந்த மட்பாண்டங்களின் மகத்துவத்தை உணர மறுக்கும் யாழ். குடாநாட்டு மக்களின் இன்றைய தெரிவோ 'ஒட்டவே ஒட்டாது' என்ற (Non stick) நொன்ஸ்ரிக் பாத்திரங்களாகும். அதிகம் வழுக்கும் பூச்சு என்று கின்னஸ் சாதனை படைத்த ரெஃலான் (Teflon) பசை தடவிய இந்தத் பாத்திரங்கள் பிசிறுகள் இன்றி இலகுவாகக் கழுவிச் சுத்தம் செய்யக் கூடியவை. கொழுப்புக்குத் தடா போட்ட கொலஸ்திரோல் மனிதர்களுக்காக எண்ணெய் இல்லாமலே இதில் பொரிக்கலாம். இவை போன்ற வசீகரங்களினால் தூண்டப்பட்ட மக்கள் இவ்வகையான பாத்திரங்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுமையல் அறைகளில் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கும் ரெஃலான் பாத்திரங்களே அதிகம் ஆபத்தானவை. ரெஃலானின் வேதியற் பெயர்: பொலிரெற்றாஃபுளோரோ எதிலீன் (Poly tetra flooro ethylene-PTFE)  ரெஃலான் பூசப்பட்ட பாத்திரங்கள் சூடேறத் தொடங்கியதும் ரெஃலானிலிருந்து முதலில்  நுண்ணியதும் அதிநுண்ணியதுமான துகள்கள் மேற்கிளம்புகின்றன. அவை பத்து நிமிடங்களில் நுரையீரலைத் தாக்குகின்றன.
ஆயினும் புதுமை விரும்பிகளான மக்கள் தமது பாவனைச் சுலபத்துக்காகவும் கவர்ச்சிக்காகவும் ரெஃலான் பாத்திரங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ரெஃலான் பாத்திரங்களின் உண்மை நிலை அறியாத நுகர்வோர் தமக்குப் பின்னால் காலன் பின்தொடர்வதை உணராதவர்களாய் அதன் கவர்ச்சியில் மூழ்கிப் போய் எமது பாரம்பரிய உறவுகளான மட்பாண்டங்களைப் புறமொதுக்கி வருகின்றனர். 

இன்று தண்ணிக்குடங்கள்  எல்லாம் வெள்ளிக்குடங்களாக மாறிவிட்ட நவீன உலகில் இன்னமும் மாறாமல் மட்குடங்களாக இருப்பவை கொள்ளிக்குடங்கள் மட்டும்தான். ஆயினும் இன்று  வெளிநாடுகளில் வழக்கிலுள்ள மின்சார எரியூட்டல்  எதிர்காலத்தில் எமது நாட்டுக்குள்ளும் ஊடுருவி எமது மரணச்சடங்கு முறையையும் மாற்றமுறச் செய்து மரண பரியந்தத்திலாவது எம்முடன் வரும் என நினைத்த கொள்ளிக்குடங்களுக்கும் வேட்டு வைத்து விடுமோ என்கின்ற இயல்பான ஏக்கம் எம் அனைவரது நெஞ்சங்களையும் இறுக்கத்தான் செய்கிறது.
 
எவ்வாறாயினும் அழிவடைந்து செல்லும் மட்பாண்டக் கைத்தொழிலை அழிவுற விடாமல் மீட்சி பெறச் செய்ய வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். ஆகையால் இது சம்பந்தமான சிறுகைத்தொழில் அமைச்சுக்கள் இம் மட்பாண்டக் கைத்தொழிலாளர்களது நிலையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், கொடுப்பனவுகளை வழங்க முன்வருவதன் மூலம் இம்மட்பாண்டக் கைத்தொழிலை அழிவுறாது தடுத்து நிறுத்தி மீட்சிபெறச் செய்து எமது பாரம்பரியக் கைத்தொழிலை நீண்டு நிலைக்கச் செய்யவேண்டும் என்பதே எமது பெரு விருப்பமாகும்.
   

ஞாயிறு, 15 ஜூலை, 2012

‘நாம்’ கவிதை இதழ்-ஓர் இரசனைக்குறிப்பு

சமூகமேம்பாட்டில் கவிதை நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காலத்திற்கு காலம் தோற்றம் பெற்ற கவிஞர்கள் பலர் தமது கவிகளினூடாக சமூகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிகு கவிதை நூல்களின் வரிசையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நாம் கவிதை இதழும் சமூகத்தின் எழுச்சிக்கு வித்திடும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
சர்ச்சைக்குரியதாக பலராலும் விமர்சிக்கப்படும் பேஸ்புக் எனும் சமூக வலைத்தளத்தை சமூகமேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் சிந்தனையின் வடிவாக உருவெடுத்த யாழ் இலக்கியக்குவியத்தின் இரண்டாவது இதழாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த நாம் கவி இதழானது பேஸ்புக் மூலம் இலக்கியவாதிகளையும் பல புதிய படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய படைப்புகளை பதிவுகளாக எமது சமூகத்துக்கு தந்த இதழ் எனும் சிறப்பைப் பெறுகிறது.
அழகான நீலநிற வர்ண அட்டையுடன் பார்ப்பவர் மனங்கொள்ளச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கவி இதழில் நாம் என இதழின் பெயருடன் ஓர் வினாக்குறியும் சேர்த்து அமைக்கப்பட்டமை இந்த சமூகத்தில் நாம் யார் என்பதை வாசகர்களுக்கு எடுத்து உரைப்பதாக அமைந்துள்ளது. மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் குருவி மனம் எனும் கவிதை இதழின் பின்புற அட்டையை அலங்கரிக்கிறது. முதல் பக்கத்தில் தமது இரண்டாவது இதழ்வரவின் தாமதத்திற்கான காரணத்தை எம்மோடு மனம் திறந்து பேசிய நூலாசிரியர் வேலணையூர்தாஸ் அவர்கள் கவிதைகளால் பேசுவோம் என இதழின் உள்ளே எம்மை அழைத்துச் செல்கிறார். உள்ளே படைப்புகள் சமூகப்பிரக்ஞை உடையதாய் இருக்கவேண்டும் என்ற தலைப்பில் வினோத் எழுதியிருந்த கருத்துக்கள் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய கருத்துகளாக அமைந்திருந்தது. அடுத்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த உள்ளடக்கம் நூலின் கனதியை எமக்கு உணர்த்தியது. பல்வகைப்பூக்களைக் கொய்து தொடுக்கப்பட்ட ஓர் பூமாலையை போல் சுமார் முப்பத்திமூன்று இளம்படைப்பாளிகளினது கவிகளைத் தாங்கி இவ்விதழ் அமைந்திருந்தது. நமது மண்ணின் படைப்பாளிகள் மட்டுமன்றி இந்திய மண்ணின் மூத்த கவிஞர்களாகிய அய்யப்ப மாதவன் ,அமிர்தம் சூர்யா இபோன்றவர்களுடைய கவிவரிகள் இதழை அலங்கரித்திருப்பது இவ்விதழுக்கேயுரிய தனித்துவமாக அமைந்திருப்பதோடு நிந்தவூர் ஷிப்லி, ஜோகி உஸ்மான், மன்னூரான் முதலான முஸ்லிம் கவிஞர்களின் கவிவரிகள் இவ்விதழுக்கு மேலும் சுவைசேர்த்திருக்கின்றன. மனிதமனங்களுக்குள் அரும்பும் காதல் ,வாழ்வின் அவலங்கள் ,பயணச்சித்திரவதைகள், பெண்மையின் வலிகள் என சமூக அவலங்களை எமக்கு உணர்த்தியிருக்கும் இக்கவி இதழைப் படித்துச் சுவைத்தபோது அறுசுவை உண்டியோடு விருந்துண்ட ஒருவனுக்கு கிடைத்த திருப்த்தியும் களிப்பும் எனக்கிருந்தது. என்னை மிகக் கவர்ந்த இக்கவி இதழானது சமூகத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சமூக எழுச்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

சனி, 14 ஜூலை, 2012

படைப்புகள் சமூகப்பிரக்ஞை உள்ளதாய் இருக்க வேண்டும்

அறிவியல் எமக்களித்த பேஸ்புக் எனும் சமூக வலையமைப்பினூடாக இலக்கிய ஆர்வலர்கள் பலரை ஒருங்கிணைத்துக்கொண்ட யாழ் இலக்கியக் குவியம் தமது இலக்கியப் படைப்பாகிய ‘நாம்’ எனும் கவிதை நூலை இரண்டாவது தடவையாக எம் கைகளில் தவழ விட்டிருப்பது தமிழ்மீது பற்றுடைய எம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் இவ்வேளையில் இன்றைய கவிதைகள் எவ்வாறு அமையவேண்டும் என்ற எனது விருப்பினையும் கருத்தையும் இக்கவிதை இதழினூடாக பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதைகள் படிப்பவர் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியதாகவும் சமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகம் தாங்கியவையாகவும் அமைய வேண்டும். அன்றைய காலம் சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களை தமது பாடுபொருளாகக் கொண்டு கவிபுனைந்த கவிஞர்கள் தாம் வாழ்ந்த காலப்பகுதியில் தமது சமூகத்தில் புரையோடிக்காணப்பட்ட புன்மைகளை தமது கவிகளினூடாக சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முற்பட்டனர். ஆனால் இன்று எமது படைப்பாளிகளால் சமூகத்தை ஆற்றுப்படுத்தக்கூடிய கவிதைகள் வெளியிடப்படுவது மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இன்றைய கவிதைகள் பெரும்பாலும் காதல் பற்றியும் பெண்களைப்பற்றியுமே அதிகமாகப்பேசுகின்றன.
எனவே இந்நிலைமாற்றி இன்று வளர்ந்து வரும் எமது இளையதலைமுறைக் கவிஞர்கள் எமது சமூகத்தின் தேவையோடு ஒட்டியதாக தமது எண்ணங்களைப் பதிவுசெய்ய வேண்டும். தமிழர்தம் கலாசார அம்சங்களைத் தாங்கி உங்கள் கவிவரிகள் அமையவேண்டும் என்பதே சமூகப்பிரக்ஞை உள்ளவர்களது பெருவிருப்பாகும்.
 

ஞாயிறு, 6 மே, 2012

கற்கால வாழ்வை நோக்கிய யாழ்.குடாநாட்டு மக்களின் பயணம்...

கற்காலத்தில் மனித ஜனனங்கள் அதிகம் நிகழ்ந்தபோது கலாசாரம் கானல் நீராக இருந்தது. மனிதர்கள் விலங்கினத்தின் சாயலையும் தன்மைகளையும் ஏற்றிருந்தனர். ஆண் - பெண் என்ற உறவுப் பங்கீடுகள் பிணைப்புகள் அனுமதியின்றி கட்;டற்று நிகழ்ந்தன. விலங்கினங்கள்; சந்ததி விருத்திக்காகவும் கட்டவிழும் பாலியல் கிளர்ச்சிகளுக்காகவும் எதிர்பாலினத்தை நாடின. இத்தன்மை பொருந்தியவர்களாகவே அக்கால மனிதர்கள் விளங்கினார்கள். தற்போது எமது ஊர் வழக்கில் பொதுவாக பிரயோகிக்கப்பட்டுவரும் 'கள்ளக்காதல்' என்ற சொற்பதம் அக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட உறவாக காணப்பட்டது. வயதுக்கு வந்த ஆணும் சரி பெண்ணும் சரி அக்கண நேரத்தில் தோன்றி மறையும் பாலியல் உணர்வுகளை வடிகட்ட எதிர்பாலினத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது. அக்காலத்திலிருந்த உறவுகள் உடலை மையப்படுத்தியதாக இருந்தனவே தவிர உள்ளத்தை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.
 

காலங்கள் செல்லச் செல்ல மனித இனக்குழுமங்களிடையே வர்க்கப்பாகுபாடுகள் முளைவிட்டன. தமக்கென்ற ஒரு  நிலப்பகுதியை வரையறுத்து சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து தமக்கிடையில் ஒரு தனித்தன்மையைத் உருவாக்கத் தலைப்பட்டனர். இதன் விளைவாக சாதி, இனம், மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றைத் தனித்துவ அடையாளங்களாகக் கொண்டு தனித்தனிக் கூட்டப் பிரிவினர் தோற்றம் பெற்றனர். இத் தனித்துவக் கூறுகள் ஏனைய குழுமங்களிடமிருந்து தனித்துவப்படுத்திக் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டன. ஒரு இனக் குழுமத்திற்குள் அவ்வினத்திற்கே உரிய மொழி, பண்பாட்டு விழுமியங்கள், கலைகள் என்பனகருக் கொண்டதன் காரணத்தினால் சிற்சில நன்மைகள் இருந்தாலும் இன முரண்பாடுகள், சாதியப் பிரச்சினைகள் என நீண்டு இறுதியில் உட்பகை வலுத்து இனப்போராக, அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான யுத்தமாக வெடித்தது.
 

இதனால் ஓர் இனம் இன்னோர் இனம் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டது. சனத்தொகையில் கூடிய பங்கினைக் கொண்ட இனம் பெரும்பான்மை – அதிகார வர்க்கமுள்ள இனமாகவும் இதற்கு மாறாக சனத்தொகையில் சிறிய தொகையைக் கொண்ட இனம் சிறுபான்மையினமாகத் தோற்றம் பெற்றது.
அதிகாரத்தில் வலுக்கூடிய நிலையிலுள்ள இனம் வலிமை குறைந்த இனத்தை ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து அவ்வினத்தை அடக்கியாள முற்படுகிறது. இதற்கு யுத்தம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகின்றது. படை வலிமையில் கூடிய நிலையிலுள்ள இனம், குறைந்த வலிமையிலுள்ள இனத்தை தனது அதிகார பலத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி எதேச்சாதிகாரப் போக்கின் மூலம் அவ்வினத்தின் கட்டுமானத்தை உடைத்தெறிய முற்படுகின்றது. இதுவரை சிறுபான்மை இனக் குழுமத்தின் அடையாளங்களாக இருந்து வந்த மொழி, கலை, கலாச்சார கூறுகளை சிதைக்கவோ அழிக்கவோ முற்படுகின்றது.அல்லது தனது இனக் கலாசாரத்தை பிற இனத்தின் மீது திணிக்க முற்படுகின்றது. அச்சிறுபான்மை இனத்தின் அதிகாரப் பிரிவினரின் ஆட்சி ஒழுங்குகளால் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு வந்த இனஅடையாளங்கள் அவ் அதிகாரப் பிரிவினரின் செயற்திறனை உடைத்தெறிந்தவுடன் அச்சிறுபான்மை மக்களின் வாழ்வியல் முறைகளிலும் மாற்றங்கள் தென்பட்டன. இதுவரைகாலமும் இறுக்கத்துடன் கடைப்பிடித்த உயர் பண்பாட்டு விழுமியங்களை புறமொதுக்கி அன்னிய கலாசார வலையில் விழுந்து மனம்போன போக்கில் வாழத்தலைப்பட்டனர். இதனால் கற்கால மனிதரின் குணாம்சங்களையும் பண்புகளையும் தெரிந்தோ தெரியாமலோ வரவழைத்துக் கொள்கின்றனர். இதனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் குணவியல்புகள் இக்கால மக்களிடையே பதிவு பெற்று வருகின்றன.
 

தற்போதுள்ள சூழலில் கள்ளக் காதல்கள் முளைவிட்டுக்கொள்கின்றன.ஓருவனுக்கு ஒருத்தி என்ற இறுக்கமான பண்பாடுகளுடன் சிறப்புப் பெற்றிருந்த இனம் அதன் தனி இயல்புகளிலிருந்து விலகி மிருகத்தனமான செயல்களில் ஈடுபட முனைப்புக்காட்டுகிறது. கல்வி கற்று அறிவு ரீதியில் முதிர்ச்சியடைந்து விருத்தியடைந்தவர்கள் கூட அந்த விடயத்தில் மிருக உணர்வுடையவர்களாகவே இருக்கின்றனர்.
எத்தனையோ மன முறிவுகள் மண முறிவுகளுக்கு வழிவகுத்து வருகின்றன. கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுமுறை மேற்கத்தேய கலாசார உள்வாங்கலால் சிதைந்து போயிருக்கிறது. இத்தகைய மண முறிவுகளுக்கு பெரும்பாலும் 'கள்ளக்காதல்' எனும் கீழ்த்தரமான உறவுநிலை பிரதான காரணியாக விளங்குகின்றது. இந்த உறவுநிலை பதியப்படாத உறவுநிலையாக நீள்கிறது. இவ்வுறவு சமூகக் கட்டுமானங்களை உடைத்தெறியச் செய்துள்ளது. பல குடும்பப்பிரிவினைகளுக்கு வழிவகுத்துள்ளது. இன்று நீதிமன்றங்கள் தாபரிப்பு வழக்குகளால் நிரம்பி வழிகின்றன. 


கருத்தொருமித்த புரிந்துணர்வு கணவன்-மனைவிக்கிடையில் நிகழத் தவறியமையால் புனிதமான குடும்ப உறவுநிலையில் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வுறவுப் பிரிவினையால் பெரிதும் பாதிப்படைவது அவர்களது பிள்ளைகள்தான். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சூனியப்படுத்துவதற்கான சதுரங்க விளையாட்டில் இன்று பல கணவன்-மனைவிமார் இறங்கியுள்ளனர். இப்பலப் பரீட்சையால் சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.கணவன்-மனைவி உறவென்பது தனித்துவமானது. அன்னியோன்னியமானது. மரணபரியந்தம் வரை தொடரும் தன்மையுடையது. இப்புனித உறவுக்கு களங்கம் விளைவிக்கும் பல சம்பவங்கள் எமது சமூகத்தில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு படித்த மேற்தட்டு மக்களே அதிகம் பலியாகிவருவது துரதிஷ;டவசமானது. இன்றைய திருமண உறவுநிலை உடலை ,அந்தஸ்தை,  பணபலத்தைப் பார்த்தே தீர்மானிக்கப்படுகிறது. இதனால் மனித மனங்கள் ஒன்றிணையத் தவறிவிடுகின்றன.
முன்னர் இருந்த வாழ்க்கை முறை வேறு.இப்போது இருக்கும் வாழ்க்கை முறை வேறு. முன்னர் மூத்தோருக்கு மதிப்பளித்து அவர்தம் சொற்படி நடந்த கீழ்ப்படிவுள்ள சமூகம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே இடம்பெறும் பிணக்குகள் மூடுமந்திரமாகத் தீர்க்கப்பட்டன. மூத்தோரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பண்பு அன்று மேலோங்கியிருந்தமையால் மணமுறிவு தடுக்கப்பட்டது. தவிர்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. மூத்தோருக்கு மதிப்புக்கொடுக்கும் பண்புகள் அருகிவருவதனால் நிலைமை விபரீதமாகவே உள்ளது. இதனால் தாபரிப்பு வழக்குகளும் வகை தொகையின்றி நீண்டு செல்கின்றன. தீர்ப்பு வழங்கும் கால எல்லைகளும் நீள்கின்றன. இதனால் தேவையற்ற சிக்கல்களும் அதிகளவு பணமும் வீண் விரயமாகின்றன. சட்டம் படித்தவர்கள் தம் பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றனர்.
 

போர்க்காலச் சிந்தனையில் மூழ்கிப்போயிருந்த மக்களின் சிந்தனைகள் ஒருமை நிலைப்பட்டதாக இருந்தன. போரையும் அது எமக்களித்த அவல வாழ்வையும் பற்றிய சிந்தனைகள் மேலோங்கியிருந்த காலம் அக்காலம். அப்போதிருந்த ஆட்சிக்கட்டமைப்பு மக்களின் கட்டற்ற சுதந்திரத்துக்கு வேலி போட்டது. ஆண்-பெண் என்ற சமவலுநிலை பேண்தகு நிலையில் இயக்கப்பட்டது. சட்டம் என்ற இரும்பு வேலியை உடைக்க முற்பட்டவர்கள் உடைபட்டே போன வரலாறுகள் ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாய் இருந்தன. ஆனால் இன்று போரின் திரை விலக்கப்பட்டு கலாசார விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டங்கள் உறங்கு நிலையில் இருக்கின்றன.
 

நடைபெற்று முடிந்த யுத்தம் ஏராளமான கைம்பெண்களையும் இளம் விதவைகளையும் எச்சங்களாக விட்டுச்சென்றுள்ளது. இவர்களின் எதிர்கால வாழ்வு சூனியமாக்கப்பட்டுள்ளது. அவர்களது பிள்ளைகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ஏங்கியபடி நிற்கின்றனர். இளம் விதவைப் பெண்களின் வாழ்வுக்கு உரமூட்டவும் அவர்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கும் ஒளியூட்டவேண்டியுள்ள நிலையில் இவ்வாறு கணவன்-மனைவி உறவில் ஏற்படும் விரிசல் நிலைகளால் ஏராளமான குடும்பங்கள் பிரிகின்றன. இதனால் குடும்பம் ஒரு கதம்பம் என்ற முறையில் வாழ்ந்து வந்த மக்கள் சமூகம் குடும்பக்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலை சமூக இயங்கு தளத்திலும் தாக்கம் செலுத்துகிறது.


இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற முதுமொழிக்கு இணங்க அவர்களை வளமான வாழ்வுக்கு இட்டுச் செல்லவேண்டிய தமது பொறுப்புணர்ந்து இளவயதினர்களிடையே சரியானபுரிதல்கள், தன்னிலையுணர்தல், கல்வியறிவுநிலை என்பவற்றுக்கு பெற்றோர்கள் சரியான அடித்தளமிடவேண்டும். சிறந்த அத்திவாரம் அமைந்தால்தான் கட்டடம் பலமாக சிறப்புற்றிருக்கும். இல்லையேல் சிலகாலங்களின் பின் அக் கட்டடம் உடைந்துவிழக்கூடிய அபாயங்களும் காணப்படும். அதேபோலத்தான் எமது வாழ்க்கைகளும். ஆகையால் பெற்றோர்கள் தமக்கிடையே சரியான புரிந்துணர்வுகளுடன் அன்னியோன்னியமாக ஒத்திசைவுடன் வாழப்பழகினால் அவர்களது பிள்ளைகளின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் பிரகாசமானதாக இருக்கும். இல்லையேல் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வு கேள்விக்குரியதாகிவிடும். எனவே இவ்விடயத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டு செயற்பட முன்வரவேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.     

புதன், 4 ஏப்ரல், 2012

வேண்டும் விடுதலை...


கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. மகளிர்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன? என்ற வினாவுக்கு பல வரலாற்றியல் ரீதியான சம்பவங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் பால் ரீதியான அடக்குமுறைகளுக்கும் நெருக்குவாரங்களுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆட்பட்ட பெண்ணினம் வெகுண்டெழ முற்பட்டதன் பின்ணணியை அடிகோலாகக் கொண்டே சர்வதேச பரப்பெங்கும் மகளிர்தினம் அனுஷ;டிக்கப்பட்டு வருகின்றது என்ற பொதுவான உண்மையை மகளிர் தினம் உணர்த்துகின்றது.
 
உலகில் பெண்விடுதலை பற்றிய கோஷங்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் தமிழ்ப்பெண்களின் விடுதலை பற்றியும் சிந்திக்கவேண்டியது அவசியமாகும். மேற்குலக நாடுகளிலுள்ள கலாசார வரன்முறைகளைப் பின்பற்றத்துடிக்கும் எமது தமிழ்ப்பெண்களின் வாழ்வியற்கோலங்களில் பாரிய அளவு மாற்றங்களை போருக்குப் பின்பான சூழல் எமக்களித்துள்ளது. தமிழ்ப்பெண் என்பவள் இப்படித்தான வாழவேண்டும் என்ற எழுதப்படாத நிர்பந்தம் காரணமாக அவர்களின் வாழ்வியல் எல்லைப்படுத்தப்பட்டிருந்தது. உலகமே கண்டுவியக்கும் அளவிற்கு ஏனைய நாட்டு மக்களது கலாசாரங்களுடன் ஒப்பிடுகையில் அதி உன்னதமான கலாசார அம்சங்களை தன்னகத்தே கொண்டு விளங்கிய எமது கலாசார முறைமையானது தமிழ்ப்பெண்களை மையப்படுத்தியே பின்னப்பட்டிருந்தது என்ற உண்மையை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அந்தளவிற்கு அன்றைய தமிழ்ப்பெண்கள் பண்பாடு மிகுந்தவர்களாகவும் கற்பு ரீதியான ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும் விளங்கினர். அது மாத்திரமன்றி ஆணுக்குவேண்டிய பணிவிடைகளை ஆற்றுவதை தமக்குரிய தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதிய பெண்கள் தமது கடமைகளை ஆற்றவும் தவறவில்லை. 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என இயம்பப்பட்ட வழக்காற்றுக்கு இணங்க பொருலீட்டும் முனைப்பில் ஈடுபட்ட ஆண்வர்க்கத்தினர் விட்ட மகா தவறு யாதெனில் பெண்களை சிசுக்களை உற்பத்திசெய்யும் இயந்திரங்களாக நோக்கிக்கொண்டமையாகும். 

பெண்களின் உணர்வுகளையோ உள்ளார்ந்த ஈடுபாடுகளையோ விருப்பு வெறுப்புக்களையோ அன்றைய எம் தமிழ்ச்சமூகம் கருத்திலெடுக்கவில்லை. இதன் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் தமது உணர்வுகளை தமக்குள் அமிழ்த்திக்கொண்டனர். 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு'என்ற சித்தாந்தமும் வலுப்பெற்றதனால் அக்காலப்பெண்கள் கல்வி நிலையில் தாழ்வுற்று இருந்ததையும் காணலாம்.
தமிழ்ச் சமூகஅமைப்பில் பெண்கள் அடக்கிஒடுக்கப் பட்டதான வரலாற்றியலையே பார்க்கிறோம். குறிப்பாக கல்வி நிலையில் மிகத் தாழ்ந்த நிலையிலேயே வைத்து நோக்கப்பட்டனர்.இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் இனப்பகை மூண்டமைக்கான சில எடுத்துக்காட்டுக்களையும் முன்வைப்பது சாலப்பொருத்தமானதாகும்.
 
தமிழர்களின் உரிமைப்போராட்டமானது வீறு கொண்டு வெடித்ததில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலையும் பெரும்பங்கு வகித்தது. 1960,1961 களில் பெரும்பாலான பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டமையினால் பாடவிதானங்கள் பாடசாலை நிர்வாகங்களில் அரசியல் இடம்பிடித்துக் கொண்டது. அத்துடன் சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட்டதனால் அரச பதவி பெறுவதில் நாட்டம் கொண்ட பல தமிழ்மக்கள் சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைக் கல்விகற்பித்தனர். 1970 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசினால் அறிமுகஞ்செய்யப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைத்தெரிவு செய்யும்முறை தொடர்பான தரப்படுத்தல் முறையானது இனங்களுக்கிடையிலான பகையை மேலும் வளர்ப்பதில் முக்கியபங்காற்றியது.
 
இது குறித்து சிங்கள வரலாற்று ஆசிரியரான சி.ஆர்.டி சில்வா குறிப்பிடுகையில் 1977 அளவில் சிங்கள அரசிற்கும் தமிழ்மக்களுக்கும் இடையில் பிரதான பிரச்சினையாக பல்கலைக்கழக அனுமதி அமைந்தது. தாம் புறக்கணிக்கப் படுவதை எண்ணிக் கசப்படைந்த இளைஞர்கள் ஓரணியாகத் திரண்டனர் என்கிறார். பின்னர் வந்த அரசாங்கங்கங்கள் அனுமதிக்கான விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தபோதிலும் பாதிப்பு நிரந்தரமாகிவிட்டது. ஓர் இனத்தை அடக்கி ஒடுக்க அவர்களது சுதந்திரத்தில் தலையீடு செய்ததினால் ஏற்பட்ட விரக்தி தமிழ் மக்களை ஆயுதப்போராட்டம் வரை இட்டுச்சென்றது. அந்த ஆயுதப்போராட்டம் 1983இற்குப் பின்னர் முகிழ்ச்சி கண்டதை தொடர்ந்து தமிழ்ப் பெண்களின் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாயின. அகப்பை பிடித்த பெண்களின் கைகள் ஆயுதம் ஏந்தவும் செய்தன. கடந்த 30 ஆண்டுகளாக தமிழர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பலம் பெற்ற நிலையில் தமிழ்ப்பெண்களின் வாழ்வியலிலும் திருப்பங்கள் ஏற்பட்டன. அடக்கு முறைக்கு எதிராக எவ்வாறு தமிழ் இளைஞர்கள் போராட முற்பட்டார்களோ அதே போல் பெண்களும் அடிமைத்தளைகளை உடைத்தெறிந்துகொண்டு பெண்விடுதலைக்காகவும் போராடத்தலைப்பட்டனர்.
 
ஒருபுறம் இன விடுதலைக்காக போராடுவதுடன் மறுபுறம் தம்மீது வலிந்து திணிக்கப்பட்டிருந்த அடக்குமுறைக்கெதிராக கிழர்ந்தெழமுற்பட்டனர். வெற்றியும் கண்டனர்.அவர்கள் வெற்றி கண்ட பல விடயங்களில் சீதனக்கொடுமை, சமகல்வி வாய்ப்பு ,உத்தியோகங்களில் பெண்களின் பங்கு, பெண் சமத்துவம் அதாவது ஆண்களுக்குரியதாக்கப்பட்டிருந்த வீரம் செறிந்த தியாகங்களைப் பெண்களும் பகிர்ந்து கொள்ள முற்பட்டனர். மொத்தத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கட்டாப்பு தமிழ்ப்பெண்களின் வாழ்வியலில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. காலமாற்றத்தின் விளைவாக தமிழரின் உரிமைப்போராட்டம் இடைநடுவில் கருகிவிடவே அதுவரை வீரம் படைக்கும் தேவதைகளாக வலம் வந்த பெண்கள் போர் முடிவுக்கு வந்த பின்னர் உலகில் காட்சிப் பொருள்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏராளமான இளம் பெண்களின் நிர்வாண உடல்கள் உலக தொலைக்காட்சிகளின் காட்சிப்பொருள்களாகின. 

யுத்தம் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. பெண்களுக்கு இருந்து வந்த பாதுகாப்பரண் சிதைக்கப்பட்டிருப்பதால் பெண்களின் வாழ்வியல் தற்போது கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு வீதிகளில் மாத்திரமன்றி வீடுகளிலும் கூட பாதுகாப்பற்ற சூழ்நிலை தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றது. பெற்ற தந்தையாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அது மாத்திரமல்லாமல் கலாசார சீர்கேடான நடவடிக்கைகளில் குறிப்பாக யுத்தத்தால்பாதிக்கப்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பற்ற உறவால் முறைதவறிப்பிறந்த சிசுக்களை உயிருடன் சூடாறும் உடனே வெட்டிப்புதைக்கும் அவலமும் அரங்கேறிவருவது பெண்களின் மீது தாய்மையின் மீது சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. மேலைத்தேய கலாசார மோகம் தமிழர் பிரதேசத்தில் தலை விரித்தாடுவதால் முன்னர் வாழ்ந்த தமிழர்க்கேயுரிய கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகி தமது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு தவிக்கும் பெண்களே ஏராளம்.
 
எனவே தமிழர் பிரதேசங்களில் மகளிர் தினத்தை பெரும் எடுப்பில் கொண்டாடிவரும் மகளிர் அமைப்புக்கள் மகளிர் தினம் கொண்டாடுவதுடன் மட்டும் தமது கடமைகளை வரையறை செய்யாது யதார்த்த பூர்வமாக தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அணுக வேண்டியது அவசியமாகும்.

வெள்ளி, 2 மார்ச், 2012

எரிபொருள் விலையேற்றமும் எதிர்ப்பு அரசியலும்

எரிபொருள் மீதான அரசின் விலை அதிகரிப்பானது நாட்டு மக்கள் மத்தியில் பாரிய பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. இம்மாதம் 11ம் திகதி முதல் பெற்றோலின் விலை லீற்றருக்கு 12  ரூபாவினாலும் டீசலின் விலை 31 ரூபாவினாலும் மண்ணெண்ணெயின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டதையடுத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து பணிப்பகிஷ;கரிப்பில் இறங்கினர். கொழும்பிலும் யாழ். குடாநாடு முழுவதும் இடம்பெற்ற இப்பணிப் பகிஷ;கரிப்பின் காரணமாக சீரான போக்குவரத்து நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன. 

பாடசாலை செல்லும் மாணவர்களும் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நோயாளர்களும் வேலைத்தளங்களுக்குச் செல்வோரும் பயணத்தை மேற்கொள்ள முடியாது பெரும் அவதிக்குள்ளாகினர்.  






மக்கள் பெரும்திரளாக அரச பேரூந்துகளின் வருகையை எதிர்பார்த்து வீதிகளிலும் பஸ்தரிப்பிடங்களிலும் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர். அன்று முழுவதும் தொடர்ந்த பகிஷகரிப்பு கட்டணங்களை அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து கைவிடப்பட்டது. எனினும் பஸ்கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பானது பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் ஊழியர்கள் எனப் பல்வேறு  தரப்பினரின் போக்குவரத்திலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.
 
அரசின் இந்த எரிபொருள் மீதான விலை அதிகரிப்பானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் உழைக்கும் வர்க்கத்தினர் மீனவர்கள்;, விவசாயிகள் உற்பத்தியாளர்கள், முச்சக்கரவண்டிடியாளர்கள், தனியார் பேரூந்து மற்றும் லொறி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியள்ளது.
 
யுத்தம் முடிவடைந்த நிலையில் ஏ-9 பாதை திறக்கப்பட்டுள்ளமையால் இன்று தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள், லொறிகள் என்பன தவணைக்கட்டண அடிப்படையில் கொள்வனவு (லீசிங்) செய்யப்பட்டவையேயாகும்.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக போக்குவரத்துக்கட்டணங்களை அதிகரித்ததால் பயணிகளின் வரவு  குறைவடைந்து தமது வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கவலையடைகின்றனர்.
 
எரிபொருளின் அதிகரிப்பால் மின்சாரக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதியுள்ளவர்களுக்கு இம் மின் கட்டண அதிகரிப்பு பெரும் சுமையாக இருக்க யாழ்.குடாநாட்டில் தீவகம், வலிகாமம் பகுதியிலும் வடமராட்சியில் பல பகுதிகளிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களிலும் வன்னி பெருநிலப் பரப்பின் பல பகுதிகளிலும் மின்சார வசதி அற்ற நிலையே காணப்படுகிறது. குப்பி விளக்குகளை நம்பி வாழும் இப்பிரதேச மக்களுக்கு மண்ணெண்ணெய் விலையில் ஏற்படுத்தப்பட்ட 35 ரூபா அதிகரிப்பானது பெரும் செலவீனமாக மாறியுள்ளது.
மீள்குடியேறியிருக்கும் மாணவர்களுக்கு எஞ்சியிருப்பது அவர்களது கல்வி மட்டுமேயாகும். மண்ணெண்ணெய் மீதான அரசின் விலை அதிகரிப்பானது வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வேட்டு வைப்பதாகவே அமைந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் குப்பிவிளக்கு வெளிச்சத்தில்கூட தமது படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு வன்னி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
எரிபொருள்கள் விலை அதிகரிப்பால் மீனவர்களும் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளனர். சாதாரணமாக மீன்பிடிப்படகொன்றுக்கு 70 முதல் 80 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் மண்ணெண்ணெயின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாளொன்றுக்கு கடல்ப்போக்குவரத்துக்கு சுமார் 5 ஆயிரம் ரூபா மேலதிகமாகத் தேவைப்படுவதாகவும் நீண்டகால மீன்பிடிப்படகொன்றுக்கு மேலதிகமாக ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபா செலவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அதைஈடுசெய்ய மீன்விலையை அதிகரிப்பினும் மக்கள் கொள்வனவு செய்யத் தயங்குவார்கள் எனவும் வருத்தத்துடன் கூறிவருகின்றனர். 

இதேவேளை எரிபொருள்கள் மீதான விலை அதிகரிப்பை அடுத்து யாழ்.குடாநாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் பால்மா வகைகள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை போக்குவரத்து செலவீனங்களைக் காரணம் காட்டி உயர்த்திவரும் வர்த்தகர்கள் ஏற்கனவே களஞ்சியப்படுத்தியிருந்த பொருட்களின் விலைகளையும் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே 'ஆனை விலை! குதிரை விலை! என அதிகரித்துச் செல்லும் விலைவாசிச் சுமையை தாங்க முடியாமல் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.                            

அனைத்துப் பொருட்கள் மீதான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசை எதிர்த்துப்போராட நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதங்களை விடுத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முனைப்போடு வீதியில் இறங்கிப்போராடத் தொடங்கியுள்ளனர். தன்னிச்சையாக விலைகளை அதிகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானியம் வழங்க முன்வருவதாக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றும் அரசை நம்பாமல் மக்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த எதிர்ப்புப் போராட்டம் அரசுக்கு பெரும் தலையிடியாகவே உருவெடுத்துள்ளது. மக்களுடைய எதிர்ப்பையும் போராட்டங்களையும் முடக்க அரசு தமக்கு எதிராகப் போராடும் மக்களை ஆயுத முனையில் அடக்கி ஒடுக்க முயன்று வருகிறது. 

இவ்வாறு பொதுமக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அரசு சிலாபத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அப்பாவி மீனவர் ஒருவரின் சாவுக்கும் காரணமாகியது. யுத்த காலத்தில் அப்பாவி மக்களை ஆயுதமுனையில் மிரட்டிய அரசு  யுத்தம் முடிவுற்ற பின்னரும் தனது காட்டு மிராண்டித்தனத்தைக் கைவிடவேயில்லை. சிவில் நிர்வாகம் எனக் கூறிக்கொண்டு ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தவே முயல்கின்றது என்பதையே அரசின் இச் செயல் வெளிக்காட்டி நிற்கின்றது. 


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சிந்திப்போம்...செயற்படுவோம்...


லாசாரபூமி என பலராலும் வர்ணிக்கப்பட்ட யாழ்ப்பாணக்குடா
தற்போது கலாசாரசீர்கேடுகளின் அரங்கமாக மாறிவருகிறது. யாழ்.மண்ணின் மகிமையை குன்றச்செய்யும் வகையில் புதியதொரு பிரச்சினையாக இக்கலாசாரசீர்கேடு தலைதூக்கியுள்ளது. இவைகளை எவ்வாறு தடுத்து நிறுத்தி அதிலிருந்து எவ்வாறு எமது சமூகத்தை மீட்சிபெறவைப்பதென்பதே எமக்கிருக்கும் பெரும்சவாலாகும். பண்பாட்டின் கருவூலமாகப் பார்க்கப்பட்ட யாழ்.மண் இன்று கொலை, களவு ,பாலியல் துஸ்பிரயோகம், விபசாரம் வேண்டத்தகாத உறவுகள் மது போதைவஸ்த்துப்பாவனை  என்பவற்றுள் சிக்கிச் சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது.
 
ஆகவே எமது சமூகம் ஏன் இத்தகைய தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது? இத்தகைய தவறான போக்கு இறுதியில் எம்மினத்தை எங்கு கொண்டு சேர்க்கப்போகிறது? எனும் கேள்விகள் எம் மனதைக் குடைகின்றன.
 
உலகிற்கே பண்பாட்டைக் கற்றுத்தந்தவர்கள் நாம் என்று பெருமை பேசிய எம்மவர்கள் இன்று அந்நிலைகடந்து எம்பண்பாட்டைத் தொலைத்து மொத்த இனத்துக்கும் களங்கம் கற்பிக்க முனைவது தமிழர்களாகிய நாம் வருந்தத்தக்க விடயமாகும். நாம் கடந்து வந்த காலங்களின் நினைவுகளை சற்று மீட்டிப்பார்ப்போமேயானால் அன்று எம்மினம் கொடிய யுத்தத்தால் முழுமையாக உள்வாங்கப்பட்டிருந்த காலம். எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரினாலும், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளினாலும், உயிரிழப்புக்கள் ,உடமை இழப்புக்கள் உறவுகளின் இழப்புக்கள் என துன்பச்சுழியில் சிக்கிச் சுழன்ற காலமது.  அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுபடத்துடித்த எம்மக்கள் என்றுமில்லாதவாறு பெரும் மனிதப்பேரவலங்களைச் சந்தித்தவண்ணமிருந்தனர். இந்நிலையில் கூட எமது யாழ்.மண் தமது கலைகலாசார பண்பாட்டு விழுமியங்களில் ஆழவேரூன்றியிருந்தது. தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் கட்டிக்காக்கப்பட்டன. ஒழுக்கம் தலைசிறந்து விளங்கியது.
 
இவ்வாறு அன்று எம்மினம் ஓர் தனிச்சிறப்போடு மிளிர்ந்தமைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் எம் மண்மீதும் எம் பண்பாட்டின் மீதும் கொண்டிருந்த அதீத அக்கறையும் பண்பாட்டைப்பேணுவதில் காட்டிய கண்டிப்புமே ஆகும். ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. மது, போதைவஸ்து, விபசாரம், காமக்களியாட்டங்கள் என யாழ் மண் ஓர் உல்லாசபுரியாக மாறிக்கொண்டிருக்கிறது. யுத்தகாலத்திலே எம் உறவுகள் பலர் காணாமல்போனோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல் யுத்தத்தின் பின் யாழ்.மண்ணின் பண்பாடும் காணாமல்போனோர் பட்டியலில் சேர்ந்துகொண்டிருப்பது சமூகப்பிரக்ஞை உள்ளவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகின்றது. உரிமைகள் மறுக்கப்படும்போது புரட்சி ஓங்குவதும் சட்டம் செயலற்றுப்போகும்போது வன்முறை வெடிப்பதும் நீதி நிராகரிக்கப்படும்போது அநீதி தலைகாட்டுவதும் நியதியாகும். ஆகையால் யாழ்.குடாநாட்டில் நடந்தேறும் கலாசாரசீர்கேடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் ஆளுமைமிக்க ஓர் தலைமைத்துவம் இல்லாமையே சீர்கேடுகள் அதிகரிக்க வழிவைக்கிறது என்பதே நிதர்சன உண்மையாகும்.
 
எமது பண்பாட்டுச்சிதைவுகள் என்பது வெறுமனே பாலியல் சீர்கேட்டுச்சம்பவங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. .அதற்கு அப்பாலும் விரிவடைந்து செல்கின்றது. பன்நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மூத்தோரை மதிக்கும் பண்பு இன்று எம்மவரில் எத்தனைபேரிடம் காணப்படுகிறது? ஏன்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும். இன்று எம் இளைஞர்களில் பலர் அடிதடி, கொலை, களவு என வன்முறையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பது கண்கூடாகும். ஈரைந்து மாதங்கள் தம்மைக் கருவறையில் தாங்கி பாலூட்டி சோறூட்டி அரவணைத்த தாயையும் தோள்மீது தாங்கி வளர்த்த தந்தையையும் இன்று முதியோர் இல்லங்களில் கொண்டுசேர்க்கும் அளவில் தான் எம்மவரின் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது.
 
அன்று யாழ்.மண்ணில் வாழ்ந்த மக்கள் இறைபக்தியும் ஆன்மீக நாட்டமும் மிக்கவர்களாக விளங்கினார்கள். காலையில் எழுந்து நீராடி தினம்தோறும் ஆலயங்களுக்குச்சென்று இறைவழிபாடு ஆற்றிவந்தார்கள். இன்று எமது மக்களோ இறைவனைத் தரிசிக்கக்கூட நேரமின்றி பணம் பணம் என்று பிணம் தின்னிக் கழுகுகளாய் பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காலை எழுந்தவுடன் இறைவனைப் பூசித்த காலம் போய் இன்று காலை எழுந்தவுடன் இளைஞர் முதல் முதியவர் வரை வயது வித்தியாசமின்றி மதுச்சாலைகளின் முன்னே அது திறக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதைக் காணமுடிகிறது.
தென்னிலங்கைவாசிகள் யாழ். மண்ணிலே வேலைசெய்து பிழைப்பை நடத்த
எம்யாழ்.  மண்ணின் மைந்தர்களோ வேலைசெய்ய நேரமுமின்றி வேலைசெய்யும் மனோநிலையும் அற்றவர்களாய் வெளிநாடுகளில் அவர்களது உறவுகள் வியர்வை சிந்தி உதிரத்தை உழைப்பாக்கி அனுப்பும் பணத்தை வீணே மதுப்போத்தல்களுக்காகவும், புகைத்தலுக்காகவும் கரைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகிற்கே பண்பாட்டைக் கற்றுத்தந்த எம் இனம் இன்று நாகரிக மோகத்தால் கட்டுண்டு தமிழர் பிரதேசத்துக்கும், பண்பாட்டுக்கும் ஒவ்வாத வகையில் விரசமான ஆடை அணிகலன்கள் சிகை அலங்காரங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறது.
 
'இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்'ஆகையால் இன்று யாழ்.சமூகத்தின் மீது அக்கறை கொள்ளாது இனத்தின் இருப்பை உறுதி செய்ய முன்வராத எம் இளைஞர், யுவதிகளை நாளை நாட்டின் தலைவர்களாக்கினால் எமது யாழ் சமூகத்துக்கு எதைச்செய்யப்போகிறார்கள் என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
 

எனவே இளைஞர்களே, யுவதிகளே உங்கள்  பிரதேசத்தில் இடம்பெறும் சமூகப்பிறழ்வுகளைப் புறமொதுக்கி  எமது பண்பாட்டைக்காக்க விரைந்து செயற்படுங்கள் அவ்வாறின்றி வெறும் சிற்றின்பங்களுக்குள் மூழ்கிக் கிடப்பீர்களாயின் எமது இனம் எமது பண்பாடு என்பன அழிந்து போகும். இதற்காகவா நாம் இத்தனை காலமும் இவ்வளவு இன்னல்களை எதிர்கொண்டோம்? முகம் கொடுத்தோம்? உடமைகளை இழந்தோம் உறவுகளை இழந்தோம், அங்கங்களை இழந்தோம் அநாதைகளானோம் இத்தனை துன்பங்களைத் தாங்கியது எதற்காக....?
எம் இனம் வாழ எம்குலம் வாழ எம்மொழி எம்பண்பாடு வாழ வேண்டும் என்பதற்காகத்தானே? ஆகையால் யாழ். குடாநாட்டு இளைஞர்களே யுவதிகளே மூத்தோர்களே கல்விமான்களே சிந்தியுங்கள் எம் பண்பாட்டைக் காக்கும் முனைப்போடு செயற்படுங்கள் வருங்காலம் உங்கள் கையில்.

சனி, 14 ஜனவரி, 2012

மாற்றமுறும் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்படுமா...?

நவநாகரீக மோகத்தில் கட்டுண்டு கிடக்கும் இன்றைய இளம் சமுதாயத்தை மீட்சி பெற செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும் எமது கடமையாகும்.
பன்நெடுங்காலமாக போற்றி வளர்க்கப்பட்டு வந்த தமிழர் தம் பண்பாட்டு விழுமியங்கள் இன்று தேக்க நிலையை அடைந்து அடிச்சுவடுகளே தெரியாத அளவிற்கு மங்கி மறைந்து வருகின்றது. இந்நிலை சமூகப்பற்றுள்ளவர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்துகின்றது. கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தின் பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது எம்மனதில் ஓர் பூரிப்பு ஆனால் இன்று நாம் எம் பண்பாட்டு விழுமியங்களை ஓரளவிற்கேனும் பிரதிபலிக்கின்றோமா? என்று எண்ணுகையில் எம்நெஞ்சம் கனக்கிறது.

இன்று எமது சமூகம் ஓர் கந்தறுந்த சமூகமாக மாற்றமடைவதற்கு காரணமானவர்கள் யாவர்? அதன் பிண்ணனிச் சூழல்கள் யாவை? அதன் தூண்டற் பேறுகள் எவை? என்ற அடிப்படைக் கேள்விகள் எம் முன் எழுவது தவிர்க்க  முடியாதுள்ளது.தட்டுத்தடுமாறி தறிகெட்டுத்திளைக்கும் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்துவரும் சமூகப்பெருந்தகைகள் அறிஞர் பெருமக்கள் கல்விமான்கள் அனைவரும் எமது சமூகப்பிறழ்வுகளைச் சுட்டிக்காட்டாது அவர்களைத் திருத்த முயலாது ஒதுங்கிக்கொள்வதை காணமுடிகிறது.ஏன் இந்த நிலமை என்று ஆராய்ந்து பார்த்ததில் கல்வி அறிவுமிக்க மூத்தோர்கூட எமது சமூகத்துக்கு கலாசாரத்திற்கு விரோதமாக ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை அவதானிக்க முடிகிறது.சமூகத்தை திருத்துவதற்கு தாம்முற்படும் போது தம்மீதான குற்றங்கள் அம்பலத்திற்கு வரும் என்ற ஒரு குற்றஉணர்வு அவர்களை ஆட்கொள்ள முனைகிறதா? இவ்வழியில் ஒதுங்கியிருந்தால் யார் எமது சமூகத்துக்கும் இளையதலைமுறைக்கும் வழிகாட்டுவது? போன்ற பல்வேறு அடிப்படைக் கேள்விகள் எம்மனதில் எழுகின்றமை இயல்பானதே.இவற்றுக்கு நாம் விடைதேட முனையவேண்டும்.

பொதுக்கைங்கரியங்களில் ஈடுபடும் சமூகநல அக்கறை வாய்ந்தவர்கள் எம் சமூகத்தை வெறுக்காது கோபதாபங்களுக்கு ஆட்படாது யதார்த்தமாக எமது சமூகப் பிரச்சினைகளை அணுகி எமது சமுதாயத்தை மீட்சிபெற வைக்க வேண்டும்.நாம்கடந்து வந்த பாதையை சற்று ஒருகணம் திரும்பிப்பார்ப்போமேயானால் அக்காலத்தில் வாழ்ந்த எம்மக்களின் வாழ்வியல் முறைகள் இறுக்கமான கலாசார ஒழுக்க விழுமியங்களை எங்கும் எதிலும் கடைப்பிடிக்கும் இயல்பு ,மூத்தோரை மதிக்கும் பண்பு, மாதா பிதா குரு ஆகியோருக்கு மதிப்பளிக்கும் பண்பு, இறைபக்தி ,ஆன்மீகநாட்டம் ஒழுக்கமுறை  ,கல்விமுறை போன்ற பல உன்னதமான பண்பாடுகள் இருந்தன.அன்றையகாலம் யுத்த அரக்கனின் கோரப்பிடிக்குள் எம் இனம் சிக்குண்டிருந்த காலம் சமாதானத்தையும் நிம்மதியையும் அமைதியையும் யாசித்து நின்ற எம்மக்களின் மனதில் வேதனை, விரக்தி, வெறுமை, வெறுப்பு என்பவை மனதில் குடிகொண்டு எதிர்காலம் கருகி நாளை என்ன நடக்குமோ? என்ற இயல்பான ஏக்கம் எம் இனத்தின் நம்பிக்கைக் கீற்றுக்களைத் தடுத்தது.உயிர்ப்பலிகள், படுகொலைகள், அங்க இழப்புக்கள், உறவுகளின் இழப்புக்கள், சொத்திழப்பு ,இடம்பெயர்வு என மக்கள் துன்பசாகரத்தில் மூழ்கியிருந்த காலமது.இந்நிலையில் கூட எம்மவர்கள் கலாசார விழுமியங்களைப் பேணுவதில் அசுர சாதனை படைத்தனர்.இதன் பிண்ணனியை நோக்கினால் அப்போது ஆட்சியிலிருந்தவர்கள் எமது கலாசாரத்தைப் பேணிப்பாதுகாப்பதில் கொண்டிருந்த கண்டிப்பான அக்கறைகளால் தமிழரின் ஒட்டுமொத்த அடையாளமும் கட்டிக்காக்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை.'தட்டிக்கேட்க ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்' என்பது போல தான்தோன்றித்தனமான போக்கு முளைவிடத்தொடங்கி விட்டது.

அன்னிய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பு ,தரமற்ற சினிமாக்களின் தரிசனம் என்பவை எமது வாழ்வியலில் எதிர்மறையான பிரதிபலிப்புக்கள் ஏற்பட நிலைக்களனாக அமைந்தன.இவை தவிர தற்போது போர் ஓய்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் தென்னிலங்கைச் சுற்றுலாப்பயணிகளின் வருகையினாலும் பல்வேறுவகையான கலாசார சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.அதுமட்டுமன்றி தற்போது எம்மவரை ஆக்கிரமித்திருக்கும் செல்லிடத்தொலைபேசிகளின் அசுர வியாபகம் எமது சமூக பொருளாதார பண்பாட்டுத்தளத்தில் காத்திரமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. மிக நவீனத்துவம் வாய்ந்த செல்லிடத்தொலைபேசிகளை முறைதவறிப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளமையால் இவையும் எமது சமுதாயப்பிறழ்வுகளுக்கு காரணமாகின்றன. மது, போதைவஸ்துப் பாவனை அடிதடி என்று கட்டுக்கடங்காத்திரியும் இளைஞர்கள், நாகரீகம் என்ற போர்வையில் அநாகரிகமாக உடையணிந்து பவனிவரும் நவநாகரீக கன்னியரின் விரசமான உடை, சிகை அலங்காரம் போன்ற சமூகத்துக்கு ஒவ்வாத செயல்கள் எமது சமுதாயத்தில் வக்கிரஉணர்வையும் பாலியல்வன்புணர்ச்சி போன்ற சமூக விரோத செயல்களையும் தூண்டி எமது பண்பாட்டில் சிதைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான சமூகபிறழ்வான நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பானது எமது இனத்தின் இருப்பிற்கே வேட்டுவைக்கும் கருவிகளாக மாற்றமடைய சந்தர்ப்பங்களும் உண்டு.

இன்று தமிழினத்தின் கலாசாரம் செத்துக்கொண்டிருக்கிறது.தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கூட கலாசாரத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படுவதில்லை. திருமணவைபவங்கள், ஆலயத்திருவிழாக்கள் ,சமயவிழாக்கள், பண்டிகைகள், போன்ற மங்களகரமான நிகழ்வுகளிலும் மரணச்சடங்கு போன்ற துன்பகரமான நிகழ்விலும் தமிழர்தம் பண்பாட்டை பிரதிபலிப்பதில்லை.அத்துடன் மேற்படி நிகழ்வுகளில் ஊடுருவியுள்ள வீடியோ கலாசாரம் தமிழரின் பண்பாட்டு அம்சங்களுக்கு வேட்டு வைக்க முயல்கின்றது.நிகழ்வுக்காக வீடியோ படப்பிடிப்பு என்ற நிலைமாறி வீடியோ படப்பிடிப்பிற்கான நிகழ்வு என்றமைந்து பல சம்பிரதாயங்களைக் கூட புறக்கணிக்கப்பட்டு வருகின்றதைக் காணக்கூடியதாயுள்ளது. 'புதியன புகுதலும் பழையன கழிதலும் கால வழுவல- கால விதிமுறைக்கே' ஆயினும் தலைமுறை தலைமுறையாகப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த அரிய பல முதுசொம்களை பேணிப்பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். ஒரு இனத்தின் சான்றுகளான மொழி பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படுமேயானால் அவ்வனத்தின் ஸ்திரத்தன்மையை (Stability) உறுதி செய்ய முடியும்.இல்லையேல் அவ்வினம் அழிக்கப்பட்ட இனமாக, ஒடுக்கப்பட்ட இனமாக, இனம் என்ற அடையாளமே இல்லாத ஓர் இனமாக மாறுதல் அடையக்கூடிய அதிகபட்ச சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ளது. இதில் எமது இனமும் விதிவிலக்கல்ல என்பதை ஒவ்வொரு இளைஞர் யுவதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.








சூழலை மாசுபடுத்தும் புகை கக்கி வாகனங்கள்

நேரடி ரிப்போர்ட்


யாழ்குடாநாட்டில் வாகனங்களின் பெருக்கம் அபரிதமான முறையில் பெருகிவருகின்றது. சுவட்டு எரிபொருட்களை மூலமாகக் கொண்டியங்கும் இவ்வாகனங்கள் சூழலுக்கு நட்பானவையல்ல.இவை சூழலில் பல பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன. யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரையில் இன்று வாகனங்களின் பெருக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகிறது. இவ்வாறு பெருகிவரும் வாகனங்களில் பெரும்பாலானவை தரமற்ற பழைய இயந்திரங்களைக் கொண்டியங்குபவையாகவே உள்ளன. இதன்காரணமாக இவை அதிகமாகக் கக்கும் நச்சுப்புகைகளை சுவாசிக்க முடியாது மக்கள் அவஸ்தைப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
 
யாழ்குடாநாட்டை அச்சுறுத்திவரும் இவ்வாகனங்கள் பற்றியும் அவற்றால் வெளிவிடப்படும் நச்சுப்புகைகளால் மனிதனுக்கும் சூழலுக்கும் ஏற்படும் விளைவுகள் பற்றி சூழலியலாளரான பொ.ஐங்கரநேசனிடம் வினவியபோது,
 
புகைகக்கும் வாகனங்கள் பற்றிக் கருத்துக்கூறிய அவர் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த வருடத்தைக்காட்டிலும் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதிக் கணிப்பின்படி வாகனங்களின் பெருக்கம் சுமார் 70 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறினார். இத்தகைய வாகனங்களின் பெருக்கம் காரணமாக யாழ்.குடாநாட்டு மக்கள் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகள் விபத்துக்களைச் சந்தித்துவருவதுடன் இவற்றில் கணிசமான அளவு வாகனங்கள் பாவனைக்குத் தரம் அற்றவையாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். நீண்டதூரப் போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் நிலை கடந்து இன்று குறுந்தூரப் பாவனைக்குக் கூட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தும் போக்கு எம்மவரை ஆட்கொண்டுள்ளதால் துவிச்சக்கரவண்டிப் பாவனை அருகி வருவதாகவும் இன்று யாழ்ப்பாண மக்கள் தமது சமூகஅந்தஸ்தை உயர்த்திக் காட்டும் ஓர் சாதனமாக மோட்டார் சைக்கிளைக் கருதுவதால் மோட்டார் சைக்கிள் இல்லாத தனிநபரே இல்லை எனும் அளவில் மோட்டார் சைக்கிள் பாவனை குடாநாட்டு மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ளது என்றார்.
 
இத்தகைய மோட்டார் வாகனங்கள் சுவட்டு எரிபொருளை எரித்து இயங்கும் திறன் வாய்ந்தவை ஆகையால் இவை வெளிவிடும் புகைகள் காபன்மொனொக்சைட்(Carbanmonoxide Co2), நைதரசனொட்சைட்(No2), சல்பர்டைஒக்சைட்(So2),Benzene,Formaldehide, போன்ற நச்சுவாயுக்களுடன் உலோகத்துகள்களையும் ஈயத்துணிக்கைகளையும் வளியில் சேர்க்கின்றன. இத்தகைய கட்புலனாகாத இரசாயனச் சேர்வைகள் சூழலுக்கும் மனிதனுக்கும் பெரும் கேடுவிளைவிக்கக் கூடியன. இதில் காபனோர் ஒக்சைட்டானது ஈமோகுளோபினுடன் மிக நாட்டமாகப் பிணைப்படையக் கூடியதாகும். இதனால் காபொட்சி ஈமோகுளோபின் உருவாகிறது. இதன் விளைவாக ஈமோகுளோபினால் ஒட்சிசனைக(O2) காவிச்செல்லும் திறன் குறைவடைகிறது. அது மட்டுமன்றி இவ்வாகனப்புகையுடன் வெளியேறும் ஈயமானது மனித உடலிலுள்ள செங்குருதிக் கலங்களைப் பாதித்து குருதிச்சோகையை ஏற்படுத்தும் திறன் வாய்ந்தது. Benzene என்பு மச்சையைப் பாதிக்க வல்லது என்றார்.
 
மேலும் சூழல் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் வளர்ச்சியடைந்த நாடுகள் தனிநபர் மோட்டார் வாகனப் பாவனைகளைக் குறைத்து பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து வருவதாகவும் தரமான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தவே அனுமதிக்கும் அந்நாடுகளில் ஒவ்வொருவாகனமும் Vehicle Emission Test எனப்படும் புகை வெளிவிடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரச்சான்றிதழ் பெற்ற பின்னரே போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றன. எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இத்தகைய பரிசோதனைகள் இடம்பெறாமையே இவ்வாறு தரக்குறைவான வாகனங்கள் போக்குவரத்துக்களில் ஈடுபடக் காரணம் என்றார்.
 
வளிமண்டலத்திலுள்ள இயற்கை வாயுக்களின் வீதத்தை மாற்றும் வாகனங்களின் இச் செயற்பாடு நமது சற்றுப்புறச் சூழலில் பாரிய சவாச நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது. வுhகனங்களின் பாவனைத்தரத்தினைக் கருத்தில் கொள்ளாது வெறுமனே வருமானத்தை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படும் வாகனச் சாரதிகள் புகைகக்கும் வாகனங்களைச் செலுத்துவதைக் அவதானிக்கமுடிகிறது. யாழ் நகரப்பகுதியில் (JaffnaMetro Politant Region) புகைகக்கும் வாகனங்களின் பெருக்கத்தினால் அப்பிராந்தியம் விரைவான சூழல் மாசடைதலுக்குட்பட்டு வருகின்றது. இதனால் அப்பிராந்தியத்தை அண்டி வாழும் மக்கள் பல்வேறு சுவாசநோய்களுக்கும் இருதய நோய்களுக்கும் ஆட்படும் வீதம் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் இவ்வாகனங்கள் கக்கும் புகைகள் மனித உடலுக்கு விளைவிக்கும் கேடுகள் பற்றி வைத்திய கலாநிதி லக்ஸ்மனைச் சந்தித்துக் கேட்டபோது,
வாகனங்களால் வெளிவிடப்படும் புகையில் கலந்துள்ள நச்சுவாயுக்களானது நமது சுற்றுப்புறச்சூழலுக்கு குந்தகம் விளைவிப்பதோடு மனித உடலின் முக்கிய உடலுறுப்பான நுரையீரலை நேரடியாகத் தாக்குகின்றன. இவ்வாறு நுரையீரல் தாக்கத்துக்குள்ளாவதால் இது நீண்டகாலத்தில் சுவாசப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது எனக் கூறினார். அது மட்டுமன்றி நகர மயமாக்கலுக்கு உட்படும் பிரதேசங்களிலும் குறிப்பாக கட்டட நெருக்கடி கூடிய யாழ்.நகரப்பகுதியிலும் இவ் வாகனங்கள் வெளிவிடும் நச்சுப்புகைகளின் தாக்கம் அதிகமாக உணரப்படுவதாகவும் ஆரம்ப காலத்தில் பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்த ஆஸ்துமா நோய் தற்போது மனித வாழ்வில் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்படுவதற்கும் இவ்வாகனப் புகைகள் வளியில் கொண்டு சேர்க்கும் தூசி துணிக்கைகளே காரணம் எனத் தெரிவித்தார். பாவனைத்தரம் உறுதிப்படுத்தப்படாத பழைய இயந்திரங்களைக் கொண்டியங்கும் வாகனங்களால் சூழலில் விடப்படும் புகைகள் மனித சுவாசத்துக்குரிய தூய வளியின் செறிவைக்குறைத்து வருவதாகக் கூறினார்.
 
சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியது எமது கடமையாகும். எனவே பாவனைத் தரம் அற்ற பழைய வாகனங்களின் பாவனையைப் புறமொதுக்கி சூழலை அதிகளவு மாசுபடுத்தாத பாவனைத்தரம் உறுதிப்படுத்தப்பட்ட இயந்திரங்களைக் கொண்டியங்கும் வாகனங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்த யாழ் குடாநாட்டு மக்கள் அனைவரும் முன்வரவேண்டும். அவ்வாறின்றி சூழலுக்குப் பங்கம் விளைவிக்கும் தரமற்ற வாகனங்களைப் போக்குவரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவேண்டும். இனிவருங் காலங்களில் யாழ் குடாநாட்டிலும் வாகனங்களைப் புகைவெளிவிடும் பரிசோதனைக்கு(Vehicle Emission Test) உட்படுத்தி தரச் சான்றிதழ் வழங்க  அது சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என்பதே யாழ்.குடாநாட்டு மக்களின் பெருவிருப்பமாகும்.