செவ்வாய், 27 செப்டம்பர், 2011

இலக்கியக் காதலும் யாழ்ப்பாணத்துக் காதலும்
















காதலும் வீரமும் தமிழனின் இரு கண்கள் எனக் கூறிய சங்க இலக்கியங்கள், தமிழனுடைய இரு கண்களில் ஒன்றாக காதலுக்கு சிறப்பிடம் அளித்து "செம்புலப் பெயர் நீர் போல' ஒன்றாகக் கலந்த அன்புடைய நெஞ்சங்களின் பிணைப்பே காதல் என்று பறைசாற்றின.

பன்நெடுங்காலமாக தமிழர்களின் அக ஒழுக்கமாகப் பேணப்பட்டுவந்த காதல் ஒழுக்கமானது இன்று எமது யாழ்ப்பாண சமுதாயத்தால் ஓர் ஒழுக்கக்கேடாகப் பார்க்கப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. காதல் என்ற வார்த்தையைக் கேட்ட எம் மூத்தோர்கள் ஏதோ தகாத வார்த்தையைக் கேட்பது போல முகம் சுளிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்று யாழ்ப்பாணத்திலே காதலை எதிர்க்கும் பெற்றோர்களே அதிகமாக உள்ளனர். அன்புகொண்ட இரு உள்ளங்களின் வெளிப்பாடாகத் தோன்றிய காதல் இன்று எமது சமூகத்தால் ஒதுக்கப்படுகின்ற நிலையை நோக்கி நகர்வதற்குக் காரணங்கள் என்ன? புனிதமான காதலை இன்றைய கேவலமான நிலைக்கு இட்டுச்செல்பவர்கள் யாவர்? என்கிறகேள்விகள்பலருடைமனதைக்குடையத்தான் செய்கின்றன.
காதலின் புனிதத்தை அதன் தாற்பரியத்தை அறியாமலே காதல் வளர்க்கும் இளைஞர் யுவதிகளையே இன்று நாம் யாழ். குடாநாடு முழுவதிலும் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது. உள்ளத்திலிருந்து தோன்றும் உண்மையான அன்பின் வெளிப்பாடுதான் காதல் என்ற நிலைபோய் இன்று காமவெறி பிடித்த காமுகர்கள் உடலால் இணைவதுதான் காதல் என்று காதலுக்கு புது அர்த்தம் கற்பிக்க முனைகிறார்கள் இன்றைய யாழ்ப்பாண இளைஞர் யுவதிகள் ஒரு சிலர்.
இலக்கியக் காதல், தெய்வீகக் காதல் என்கிற நிலை கடந்து இன்று ஒருவருக்கொருவர் முகம் தெரியாமலே வரும் செல்போன் காதல், "பேஸ்புக்' காதல் இவற்றுக்கும் மேலாக பிறர் மனைவி மீதும் கணவன் மீதும் வரும் கள்ளக் காதல் இவையெல்லாம் இன்றைய யாழ்ப்பாணத்து நவீன காதல்கள்.

இன்று யாழ். நகரிலே பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற காதலர்கள் நிறைந்திருக்கிறார்கள். காமத்தை மட்டுமே தமது சிந்தையில் கொண்டு காதல் என்ற வார்த்தையை மட்டும் உதட்டில் வைத்து யுவதிகளின் கற்பைச் சூறையாடுவதற்காகத் துடிக்கும் இளைஞர்களே இங்கு பெரும்பான்மையாகக் காணப்படுகிறார்கள். பெண்களின் கற்பைச் சூறையாடுவதற்கு இவர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் இன்று காதல். காதல் என்ற வார்த்தையைக் கூறி குடாநாட்டு யுவதிகளை ஏமாற்றி தமது வலையில் சிக்கவைக்கும் இளைஞர்கள் காதலை வளர்க்கிறார்களோ, இல்லையோ தம்மை நம்பிவரும் யுவதிகளின் வயிற்றில் கருவை மட்டும் வளர்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

இவர்களுடைய நயவஞ்சகத்தை கண்டுகொள்ளாமல் ஏமாற்றமடைந்து வாழ்வதைத் தொலைத்து நிர்க்கதியாய் நிற்கும் பெண்களே இன்று குடாநாட்டில் அதிகம். யாழில் பெருக்கமடையும் தற்கொலைகளுக்கும் கருக்கலைப்பு முயற்சிகளுக்கும் இவர்களே காரணகர்த்தாக்கள். சில இளைஞர்கள் காதலி தம் மீது வைத்திருக்கும் காதலை உண்மை என நிரூபிப்பதற்கு அவளது கற்பை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகிறார்கள்.

ஆகவே, குடாநாட்டு யுவதிகள் இவர்களைப் போன்ற காமுகர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பாமல் இவர்களுடைய கபடத்தனத்தைக் கண்டுகொள்ள வேண்டும். பெண்களை சமூகத்தின் கண்களாக மதிக்கவேண்டிய இவர்கள் தம்மை உற்பவித்துப் பெற்றெடுத்து இப் பூமியிலே உலவவிட்ட தாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பெண்களுக்கு துரோகமிழைக்கும் பாதகர்களாக மாறிவருகின்றனர். இவர்களுடைய இவ் இழிசெயல்கள் தான் பெற்றோர்களை காதலை எதிர்க்கும் மனோபாவத்துக்கு இட்டுச்செல்கிறது.
இவ்வாறு காதலைச் சொல்லி பெண்களை ஏமாற்றும் ஆண்கள் ஒருபுறம் இருக்க ஆண்களையே ஏமாற்றும் பெண்கள் கூட்டம் மறுபுறம். "ஆசைக்கொன்று ஆஸ்திக் கொன்று' என்பது போல தமது உல்லாசத்துக்காக ஓர்ஆணைக் காதலிப்பது போல நடிக்கும் சில பெண்கள் தமது இச்சை தீர்ந்த பின் அவனை விட்டு பொருளாதார வசதிமிக்க இன்னொரு ஆணை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வதைக் காணக்கூடியாத உள்ளது.
பணத்துக்காக உடலை விற்பவளை "விபச்சாரி' என்று பெயரிட்ட சமூகம் சுகத்துக்காக தூய காதலை விற்கும் இவர்களை என்னவென்று சொல்லும்? இவர்கள் தாம் பாரதி காணவிழைந்த புதுமைப் பெண்களா?

யாழ். குடாநாட்டில் உள்ள சந்து, பொந்து, பார்க், பீச், பஸ் தரிப்பிடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில் ஸ்தானங்கள் என விரிந்துசெல்லும் பல்வெறு தளங்களிலும் காதல் வளர்த்த இளைஞர், யுதவிகள் ஆன்மிகத்தை வளர்க்கும் புனித தலங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. தமது காமலீலைகளை இங்கும் அரங்கேற்றிவருகின்றனர். "அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமாம்' என்று சொல்லிவிட்டுச் சென்றான் புதுமைக்கவி. ஆனால், இன்று நாய்களைவிட கேவலமாக வாழத்தலைப்பட்ட யாழ். இளைஞர் யுவதிகள் பொது இடங்களில் பலரும் பார்த்திருக்க தமது சில்மிஷங்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நெறிபிறழ்ந்து நடப்பதால் தான் காதல் இன்று வலுவிழந்து சமூகக்கண்ணோட்டத்தில் கேவலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

எனவே, இந்நிலை மாற்றி தமிழருடைய பாரம்பரிய ஒழுக்கமாகிய காதல் ஒழுக்கத்தை பேண் தகு நிலைக்கு இட்டுச் செல்லவேண்டியது எமது கடமையாகும். காதல் என்பது புனிதம் மிக்கது. மனிதர்களிடையே உள்ள கோபம், குரூரம் நீங்கி மனித மனங்களை இணைய வைப்பது காதல் என்ற வார்த்தையின் மகிமை கூறவந்த இலக்கியங்கள் "காதலாகிக் கசிந்து கண்ணீல் மல்கி' என்று சம்பந்தர் பாடிய போது காதல் என்பது பக்தி என்றும் "காதல் திருமகன்' என தசரதன் இராமனைக் குறித்த போது காதல் என்பது அன்பு என்றும் "ஆதலினால் காதல் செய்வீர்' என்று பாரதி பாடியபோது காதல் என்பது ஆண் பெண் நட்பு என்றும் "காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்த' என்று பாரதி தாசன் பாடிய போது காதல் என்பது உடலுறவு என்றும் இவை யாவற்றுக்கும் மேலாக "முதியோர் காதல்' என்று எழுதிய போது காதல் என்பது உடல் கடந்த உணர்வுநிலை என்றும் கூறின.



ஆகையால் யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகள் அனைவரும் இத்தனை பெருமை மிக்க காதலின் மகத்துவத்தை உணர்ந்து காதல் என்ற வார்த்தையைக் கூறி ஒருவரை ஒருவர் ஏமாற்றாது பரஸ்பரம் உண்மை அன்பைப் பரிமாறிக்கொள்ளுங்கள். யுவதிகள் தாம் காதலிக்கும் காலத்தில் காதலனுக்கு தம் உடலைக் கொடுப்பது தான் காதல் என்ற எண்ணக்கருவை மாற்றி காதலன் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துங்கள். பொது இடங்களில் அநாகரிகமாக நடப்பதை விடுத்து காதலை நேசியுங்கள். காதலை பெற்றோர்கள் எதிர்க்கும் நிலை மாறவேண்டும். மலரும் காதல்கள் சமூகத்தில் விரும்பப்படும் உன்னதமான காதல்களாக மலரட்டும்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக